”படம் எடுக்க முடியுது, ஆனா ரிலீஸ் பண்ண முடியல…” – இயக்குனர் குமுறல்

Get real time updates directly on you device, subscribe now.

‘மெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் ஹீரோ சிரிஷ் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’.

வாசன் புரொடக்‌ஷன் மற்றும் பர்மா டாக்கீஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை தரணிதரன் இயக்கியிருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

சாந்தினி தமிழரசன் நடித்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது.

அதையொட்டி படக்குழுவினரோடு நம்மை சந்தித்த இயக்குனர் தரணிதரன் ”படத்தை எடுப்பதை விட, அதை ரிலீஸ் செய்வது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது” என்று தன் ஆதங்கத்தை குமுறித் தீர்த்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது,

Related Posts
1 of 11

‘மெட்ரோ’ படத்தின் இயக்குனர் ஆனந்த் என் நண்பர், அவர் மூலமாக தான் சிரிஷ் எனக்கு அறிமுகம். நானே இந்த படத்தை தயாரிக்கணும்னு ஆசைப்பட்றேன், எனக்கு நிதி உதவி மட்டும் தேவை என்றேன். தயாரிப்பாளராக சொன்ன பட்ஜெட்டில் படத்தை முடித்து விட்டோம். படத்துக்கு அடையாளமாக ஒருவர் வேண்டும் என யோசித்த போது, யுவன் சார் என் மனதுக்குள் வந்தார்.

பட்ஜெட் பற்றி யோசித்தோம், என்ன ஆனாலும் சரி முயற்சி செய்து பார்ப்போம் என நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான தொகையை மட்டுமே கேட்டு, எங்களுக்காக பெரிய உதவியை செய்தார் யுவன். சிரிஷ் நல்ல நடிகர். திட்டமிட்டதை விட குறைந்த நாட்களில் படத்தை முடிக்க அவர் மிகப்பெரிய காரணம். சாந்தினி கற்பூரம் மாதிரி, சொன்னதை சரியாக புரிந்து கொண்டு நடிப்பை கொடுப்பார். தமிழ் தெரிந்த நல்ல நடிகை, அவரே இந்த படத்துக்கு டப்பிங்கும் பேசியிருக்கிறார்.

எடிட்டர் இந்த படத்தில் தான் அறிமுகம் ஆகியிருக்க வேண்டியது, அதற்குள் மேயாத மான் ரிலீஸ் ஆகி பிரபலமாகியிருக்கிறார். கலை இயக்குனர் கபிலன் ஒரு இலங்கை தமிழர், சென்னைக்கும் இலங்கைக்கும் பறந்து பறந்து வேலை செய்திருக்கிறார்.

நிறைய நல்ல உள்ளங்களின் ஆதரவால் தான் இந்த அளவுக்கு வந்திருக்கிறது. 8 மாதத்தில் படத்தை முடித்து விட்டோம். ஆனால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. ரிலீஸ் தேதியை நாம் முடிவு செய்தாலும், அதை இந்த சினிமாவில் சாத்தியப்படுத்த முடிவதில்லை. இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர வேண்டும்” என்றார் இயக்குனர் தரணிதரன்.