ஹீரோ ஆனார் பிக்பாஸ் புகழ் ஆரவ்!

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வெற்றி பெற்று டைட்டிலையும் தட்டிச் சென்றார் ஆரவ்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது ஆரவ்வுக்கும் – ஓவியாவுக்குமிடையே ஏற்பட்ட காதல் உலக அளவில் பேசப்பட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவ் சினிமாவில் தலை காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல மாதங்களாக அது குறித்து எந்த தகவலும் இல்லை.

இதற்கிடையே தற்போது ஆரவ் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts
1 of 135

‘ராஜபீமா’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆரவ் ஹீரோவாக நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தை சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் எஸ் மோகன் தயாரிக்கிறார்.

சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாவது குறித்து ஆரவ்விடம் கேட்டபோது, “ஒரு நல்ல படத்தை ரசிகர்களுக்கு தர வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் இடைவெளி ஏற்பட்டது. ராஜாபீமா தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான்.

ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம்” என்றார் ஆரவ்.

மேலும், “பொதுவாக, மனிதன் – விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.

முதற்கட்ட படப்பிடிப்பு பாலக்காட்டில் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் பொள்ளாச்சியில் ஆரம்பமாக இருக்கிறது.