வீடு, அலுவலகம் ஏலத்துக்கு வருகிறதா? – கே.பாலசந்தர் மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம்

Get real time updates directly on you device, subscribe now.

ரூ.1.36 கோடி கடனைத் திரும்பச் செலுத்தாததால் இயக்குனர் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும் அவருடைய கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை யுகோ வங்கி ஏலத்தில் விற்க முடிவு செய்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் அறிவிப்பு விளம்பரங்கள் வெளியாகின.

இந்த அறிவிப்பு விளம்பரங்களைப் பார்த்த திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.

ரஜினி – கமல் என்ற இரண்டு உச்ச நட்சத்திரங்களை தமிழ்சினிமாவுக்குத் தந்த கே.பாலச்சந்தரின் குடும்பத்தினருக்கு இப்படியொரு நிலைமையா? என்று துடிதுடித்துப் போனதோடு மட்டுமில்லாமல், உடனடியாக ரஜினியும், கமலும் ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு மற்றும் அலுவலகத்தை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Related Posts
1 of 36

நேற்று முழுவதும் இதுகுறித்தான செய்திகள் ஊடகங்களில் பரவிய நிலையில் அப்படி வந்த செய்திகள் எல்லாமே தவறான செய்திகள் என்று கவிதாலயா நிறுவனம் சார்பில் கே.பாலச்சந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, ”கவிதாலயா தயாரிப்பு நிறுவனம் டிவி, தொடர் நிகழ்ச்சிகளின் தயாரிப்புக்காக அரசுடமை வங்கி ஒன்றில் 2010 ஆம் ஆண்டு குடும்ப உறுப்பினர்களின் வேறு சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் வாங்கியது.

2015ஆம் ஆண்டில் திரைப்பட மற்றும் டிவி தொடர்களை நிறுத்திவிட்டு, டிஜிட்டல் தயாரிப்புகளை மேற்கொள்ள முடிவுசெய்தது.
முதலும், வட்டியுமாக சேர்த்து கணிசமான தொகையை செலுத்திவிட்டது. மீதமுள்ள கடன் தொகையைத் திரும்பச் செலுத்த வங்கியுடன் one time settlement பேச்சுவார்த்தையை சட்டரீதியாக நடத்தி வருகிறது.

இந்நிலையில், வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து சமூக ஊடகங்கள் வழியாக திரு.கேபியின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வந்து விட்டது என்று உண்மைக்குப் புறம்பான செய்தி பரவி விட்டது, எங்கள் மேல் உண்மையான பாசமும் அன்பும் கொண்டு எங்களை தொடர்பு கொண்ட நல்லிதயங்கள் இந்த தவறான செய்தியால் கலக்கமடைய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு கவிதாலயா நிறுவனம் தெரிவித்துள்ளது.