கழுவேத்தி மூர்க்கன்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

ராவணகோட்டம் சாயலில் மற்றொரு சாதி படம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தெற்குப்பட்டி என்றொரு கிராமம். அங்கு சண்டியராக வலம் வருகிறார் மேலத்தெருவைச் சேர்ந்த அருள்நிதி. அதே ஊரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி போன்ற நற்பணியாற்றி வருகிறார் கீழத்தெருவைச் சேர்ந்த சந்தோஷ் பிரதாப். சாதி வெவ்வேறாக இருந்தாலும், அந்த ஊரில் தீண்டாமை கொடி கட்டிப்பறந்தாலும் இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களின் நட்பு துண்டாடப்பட்டால் தான் அரசியலில் தனக்கு அடுத்தப்படி கிடைக்கும் என கணக்குப் போடுகிறார் ஒரு அரசியல் வாதி. அரசியல் வாதியின் கணக்கில் அருள்நிதி சந்தோஷ் எப்படி சிக்குகிறார்கள் என்பதும் ஹீரோ அருள்நிதி அதை சமாளித்தாரா? என்பதும் தான் கதை

வாட்டசாட்டமான கிராமத்து இளைஞர் வேடத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள மிகவும் சிரமப்பட்டுள்ளார் அருள்நிதி. சந்தோஷ் பிரதாப் கன கச்சிதமாக தன் கேரக்டருக்கு உயிர் கொடுத்துள்ளார். துஷாரா விஜயன் துடுக்குத் தனமான நடிப்பால் கவர்கிறார். முனிஷ்காந்த் ஓரிரு காட்சியில் நல்ல ஸ்கோர் செய்துள்ளார். யார் கண்ணன் கேரக்டர் வடிவம் பக்காவாக அமைந்துள்ளது. அவரும் சிறப்பாக நடித்துள்ளார். வில்லன் கேரக்டர் படு வீக்

இசை இமானா? என்று கேட்கும் அளவில் தான் பாடல்கள் உள்ளன. பின்னணி இசையிலும் அவரது பல பழைய படங்களின் வாசம். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு பேராறுதல்

இரு சாதிகளுக்குள் இருக்கும் வன்மத்தை& ஒற்றுமையை சமரசமில்லாமல் பதிவு செய்துள்ளார் இயக்குநர் கெளதம ராஜ். ஒடுக்கப்பட்ட மக்களுக்குள்ளும் உட்பிரிவு உள்ளது என்பதை பதிவு செய்துள்ள இயக்குநர் திரைக்கதையில் கோர்வையை தக்கவைக்க தவறியுள்ளார். சீரான பாதையில் பயணிக்க வேண்டிய படம் முடிவில் வெறும் பழிவாங்கல் படமாக முடிந்து விடுகிறது. கதைக்குப் பொருந்தாத காதல் காட்சிகளும் பெரிதாக எடுபடவில்லை. மேலும் இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் மேலத்தெரு கீழத்தெருன்னு சொல்லி படமெடுக்கிறது? கொஞ்சம் வெளியே வாங்க பாஸ்
2.5/5

#KazhuvethiMoorkan #கழுவேத்திமூர்க்கன்