”சிறிய வயதில் ரசித்த ரெமோவுடன் ஜோடி சேர்ந்திருக்கிறேன்!” – சிலிர்த்த கீர்த்தி சுரேஷ்
விக்ரமுடன் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் விக்ரமைப் பற்றி மெய் சிலிர்க்கப் பேசினார்… அவர் பேசியதாவது, ”இயக்குநர் ஹரியுடன் பணியாற்றும் போது நேரம் குறித்த திட்டமிடல் பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம். படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பாக இயங்குவதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
இந்த படத்தில் சூரி, இமான் அண்ணாச்சி, சுமித்ரா, விக்ரம் ஆகியோருடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனக்கு ரசிகையாகியிருக்கிறார். ஆனால் நான் அவர் நடித்த ‘காக்கா முட்டை’ பார்த்துவிட்டு அவருக்கு நான் ரசிகையாகியிருக்கிறேன்.
இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியதற்கு காரணம் தயாரிப்பாளர் ஷிபு அண்ணன் தான். அவர் தான் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்திடம் என்னைப் பற்றி சொல்லியிருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன்.
என்னுடைய சிறிய வயதில் ‘அந்நியன்’ படத்தின் போஸ்டரை என்னுடைய அறையில் ஒட்டி வைத்திருந்தேன். அந்த படத்தில் வரும் ரெமோவை ரசித்தேன்.
தற்போது அந்த ரெமோவுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் விக்ரம் எப்படியிருந்தாரோ அதேபோல் இந்த படத்திலும் இருக்கிறார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் இணைந்து பணியாற்றும் மூன்றாவது படமிது. தமிழில் முதல் படம்.” என்றார்.