தமிழுக்கு வரும் கன்னட ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ்!
பட்ஜெட்டில் படமெடுக்கும் கன்னட சினிமாவில் முதல் முறையாக பல கோடி ரூபாய் செலவில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் படம் ‘கே.ஜி.எஃப்’.
பிரசாந்த் நீள் இயக்கும் இப்படத்தில் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் வசிஸ்டா என்.சிம்ஹா, ரம்யா கிருஷ்ணன், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
பாகுபலி, 2.0 போன்ற பிரம்மாண்டப் படங்களின் வரிசையில் கே.ஜி.எஃப் படமும் இந்திய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என்றும், கன்னட சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்கிறார் ஹீரோ யாஷ்.
கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிடுகிறார்.
சமீபத்தில் நடந்த இப்படத்தின் தமிழ் பதிப்பின் டிரெய்லரை வெளியிட்டு விஷால் பேசியதாவது, ”இந்த படத்தின் மூலம் கன்னட சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்பதில் சந்தேகமில்லை. இதில் தானும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறேன்” என்றார்.
1951-ல் நடந்த இந்த கதை தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மும்பையில் வளரும் யாஷ், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் இருக்கும் மக்களை காப்பாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரம்.
ஹோம்பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகண்டுர் தயாரித்திருக்கும் இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 21-ஆம் தேதி 5 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது.