கிருமி – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

kirumi-review

காக்கியை முழுமையாக நம்பும் ஒரு அடித்தட்டு இளைஞன் அந்த கண்மூடித்தமான நம்பிக்கையினால் கற்றுக் கொள்ளும் வாழ்க்கைப் பாடம் தான் இந்த ‘கிருமி’.

காக்கிகளுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் உள்ள இடைவெளியைப் பேசுகிறது படம்!

எந்த வேலையும் இல்லாமல் சும்மா சுற்றி வரும் ஹீரோ கதிருக்கு ரேஷ்மிமேனனுடன் திருமணமாகி ஒரு கூடவே ஒரு கைக்குழந்தை.

பிழைப்பை ஓட்ட வழி தேடுகையில் தான் போலீஸுக்கு இன்பார்மராக இருக்கும் சார்லி மூலம் போலீஸ் நண்பர்கள் என்று சொல்வார்களே? அந்த வேலை கிடைக்கிறது.

காக்கியுடன் கை கோர்த்ததும் கதிருக்கு முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. நோ பார்க்கிங்கில் நிற்கும் வண்டிகளை தூக்கிப் போடுவதிலிருந்து ‘ந்ந்தா… நீயும் அடி’ என்று போலீஸ் அதிகாரி ரவுடி ஒருவனை அடிக்கச் சொல்லும் வரை கதிருக்கு தானே போலீஸ் ஆகி விட்ட சந்தோஷம்.

அந்த சந்தோஷத்திலேயே அந்த ஏரியாவில் இருக்கும் பார் ஒன்றில் சீட்டாட்டம் நடத்தும் தென்னவன் கும்பலைப் பற்றி தனக்கு நம்பிக்கையான போலீசிடம் தகவல் கொடுக்கிறார்.

அவரும் சக இன்ஸ்பெக்டரின் லிமிட்டுக்குள் வரும் அந்த ஏரியாவில் ரெய்டு நடத்த இரண்டு பேரின் வேலைக்கும் மேலிடத்தில் இருந்து சிக்கல் வருகிறது.

அங்கு தான் கிரிமினலாக வேலை செய்கிறது போலீஸ் புத்தி?

மோதிக்கொள்ளும் அந்த இரண்டு ‘இன்ஸ்’களும் நண்பர்களாக, அதில் ஒரு போலீஸ் மீது நம்பிக்கை வைத்த கதிர் அதிர்ச்சியடைகிறான்.

அவர்களின் இரும்புப் பிடியிலிருந்து எப்படி தப்பித்து வெளியேறுகிறான் என்பதே கிளைமாக்ஸ்.

‘மதயானைக் கூட்டம்’ கதிர் தான் படத்தின் ஹீரோ. அந்த பவர்ஃபுல்லான இரண்டு கண்கள் போதும், அத்தனை விதமான நடிப்பையும் ஒரு சேரக் கொட்டித் தீர்க்க..! போலீஸ் நண்பர்கள் வேலைக்குச் சேரும் போதும், சூதாட்டக் கும்பலைப் பற்றிய தகவலை போலீசுக்கு தரும் போதும், சார்லி அவ்வளவு தூரம் எச்சரித்தும் ”அதாம்னே இன்னும் நீ முன்னேறாம இருக்க..” என்று சொல்லும் போதும் பொருத்தமான உணர்ச்சிகளை கண்களிலேயே தவழ விடுகிறார்.

‘போலீஸ்காரன் சகவாசம் குல நாசம்’ என்பார்களே? அந்தக் கேரக்டர் தான் கதிர். நல்லவேளையாக அந்தளவுக்கு வன்முறையை கையிலெடுக்காமல் விட்டு விட்டார் இயக்குநர் அனுசரண்.

ரேஷ்மிமேனனுக்கு பெரிய பில்டப்பான அறிமுகமெல்லாம் இல்லை, மேக்கப் போடாத அந்த முகத்தில் அழகு அப்படி கொட்டிக்கிடக்கிறது.

நடுத்தர வர்க்கத்திலுள்ள ஒரு இளம்பெண் எப்படி இருப்பாளோ அப்படியே வருகிறார். காக்கி என்றாலே நடுத்தர வர்க்கத்துக்கு உள்ளூர பயம் தான், ஆனால் அதெல்லாம் அடுத்தடுத்த காட்சிகளில் சகஜமாகி விடுகிறது.

நானல் பூவாய் பாடலில் கதிருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகளில் செம மூடை கிளப்புகிறார் ரேஷ்மி. அதையும் கூட எல்லை மீறாமல் தனது கேமராவில் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள் வின்செண்ட்.

இன்ஸ்பெக்டர்களாக வரும் செளந்திர பாண்டியனும், இயக்குநர் மாரிமுத்துவும் குட் காம்பினேஷன், நிஜ போலீஸ் எப்படி இருக்குமோ அப்படியே?

கட்டிக்கொண்டு வா என்றால் வெட்டிக்கொண்டு வரும் சார்லியின் நடிப்பை முழுமையாக ரசிக்க முடிகிறது. திடீரென்று ரெளடிக் கும்பலால் தீர்த்து கட்டப்படும் போது பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்.

”இந்த போலீஸ், கிரிமினல் இதெல்லாம் ஒரு சிஸ்டம். இதுல நம்மால எதுவுமே செய்ய முடியாது” என்கிற மாதிரியான வீரியமிக்க வசனங்களில் போலீசின் இன்னொரு முகத்தை காட்டியிருக்கிறார் மணிகண்டன்.

கதிரின் நண்பனாக வரும் யோகி பாபு சீரியஸ் இடங்களில் எல்லாம் நம்ம டைம்பாஸ். ”அவனவன் சோதனைக்குழாய்ல புள்ளை பெத்துக்கிட்டிருக்கான், இவனுங்க இப்பத்தான் கற்பை பத்தி பேசிக்கிட்டு இருக்காணுங்க…”என்றவாறே எழுந்து போகும் போது தியேட்டரே சிரிப்பலையும் அதிர்கிறது.

‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டனும் இப்படத்தின் இயக்குநர் அனுசரணுடன் இணைந்து கதையை மெருகேற்றியிருக்கிறார். அந்த ஒரு காரணத்துக்காகவே இந்தப் படத்தை நீங்கள் பார்த்து ரசிக்கக் கிளம்பலாம்.

ஆனால் ‘காக்கா முட்டை’ டீமாச்சே என்கிற எதிர்பார்ப்பு மட்டும் வேண்டாம். ஏனென்றால் அதன் சூழல் வேறு, இந்தக் கதையின் சூழல் வேறு.

எந்த அதிரடிகளும் இல்லாமல் சப்பென்று முடிந்து போகிற கிளைமாக்ஸ் மட்டுமே பெரிய ட்ராபேக். அதை தவிர்த்துப் பார்த்தால் இந்தக் கிரிமி விஷமில்லாத மீன் முள்!