கோலமாவு கோகிலா- விமர்சனம்
RATING – 3/5
நடித்தவர்கள் – நயன்தாரா, யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஜாக்குலின், அறந்தாங்கி நிஷா மற்றும் பலர்
இசை – அனிருத்
ஒளிப்பதிவு – சிவகுமார் விஜயன்
இயக்கம் – நெல்சன்
வகை – ஆக்ஷன், காமெடி, த்ரில்லர்
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 20 நிமிடங்கள்
ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இருக்கும் அத்தனை லட்சணங்களையும் கொண்ட கதை. நயன் தாராவை அந்த ரேஞ்சில் மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குனர் நெல்சன்.
60 வயதைத் தாண்டிய அம்மா சரண்யா பொன் வண்ணனுக்கு நுரையீரல் புற்றுநோய். 3 மாதத்துக்குள் 15 லட்சம் ரூபாயை தயார் செய்தால் தாயாரைக் காப்பாற்றி விடலாம்.
நடுத்தர குடும்பம் திடீரென்று அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே செல்வது? சொந்த பந்தம், உற்றார் உறவினர், நண்பர்கள், வேலை செய்கிற இடம் என எல்லா இடங்களிலும் கையேந்துகிறார் நயன்தாரா.
எல்லாக் கதவுகளும் அடைக்க, போதைப்பொருளைக் கடத்துகிற கும்பலுடன் தொடர்பு கிடைக்கிறது. ஒருமுறை பொருளை கைமாற்றிக் கொடுக்க கமிஷன் கிடைக்கிறது. அம்மாவைக் காப்பாற்ற பணம் தேற்ற தொடர்ந்து கைமாற்றும் வேலையைச் செய்கிறார்.
அப்பாவி முகத்தை வைத்துக் கொண்டு அவர் செய்யும் தந்திரங்களால் முக்கியமான புள்ளிகளை போட்டுத் தள்ளுகிறார். மெயின் வில்லனை நெருங்கும் போது அவன் நயனிடம் அத்துமீற முயற்சிக்க, அவனிடமிருந்தும், இன்னொரு பக்கம் துரத்தும் போலீசிடமிருந்தும் தனது புத்திசாலித்தனத்த்தால் எப்படி தப்பிக்கிறார்? என்பதே கிளைமாக்ஸ்.
‘நானும் ரெளடி தான்’ படத்தில் பார்த்த அதே பாவாடை, சட்டை போட்ட அப்பாவி பேஸ்கட் நயன்தாரா. அப்படி ஒரு முகத்தை வைத்துக் கொண்டு ரெளடிக் கூட்டத்துக்குள் மெல்ல மெல்ல அவர் காய் நகர்த்துகிற காட்சிகள் அடடா… அபாரம்..!
நயன்தாராவின் தங்கச்சியாக வரும் கலக்கப் போவது யாரு ஜாக்குலினின் எண்ட்ரியே செம கலக்கல்! க
ஹீரோவா அல்லது ஹீரோ மாதிரியா என்று சற்றே குழம்ப வைக்கிற ஹீரோ கேரக்டரில் வருகிறார் யோகி பாபு. நயன் தாரா வீட்டுக்கு எதிரிலேயே மளிகைக் கடையைப் போட்டுக் கொண்டு அவர் அடிக்கிற லூட்டிகள் காமெடி சரவெடி. நயனின் தங்கை ஜாக்குலினை காதலிப்பவராக வரும் யு ட்யூப் புகழ் அன்பு கலகலப்புக்கு கூடுதல் போனஸ்!
வழக்கம் போல பாசக்கார அம்மாவாக பெர்பெக்ட் சரண்யா பொன் வண்ணன்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பஞ்ச் பேசும் மொட்டை ராஜேந்திரன், போலீஸ் அதிகாரியாக வரும் சரவணன் என மற்ற கேரக்டர்களும் சிறப்போ சிறப்பு. அதிலும் டேனியாக வருபவர் திரையில் தோன்றும் போதெல்லாம் தியேட்டரே விழுந்து விழுந்து சிரிக்கிறது. அந்தளவுக்கு காமெடியான நடிப்பில் தனி ஆளாக மாஸ் காட்டுகிறார்.
விஞ்ஞானம் முன்னேறிய காலமாக இருந்தாலும், இன்றளவும் ஒரு பெண்ணை இந்த சமூகம் எப்படிப்பட்ட ”பார்வையோடு” பார்க்கிறது என்பதை போகிற போக்கில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
”ப்ரோ அவங்க ரேப் பண்ணினது உங்க காதலியைத்தான் ப்ரோ. உங்க காதலை இல்லை. அது புனிதமாத்தேனே இருக்கு.”
”ஒரு தப்பு எதையுமே சரி பண்ணாது. மேல மேல தப்பு தான் பண்ணும்.”
”திருடனையே புடிக்கிறீங்கன்னா நீங்க எவ்ளோ பெரிய திருடனா இருப்பீங்க?” என வசனங்கள் அனைத்தும் விக்னேஷ் சிவனை ஞாபகப்படுத்துகின்றன.
அனிருத்தின் இசையில் ‘கல்யாண வயசு ’பாடல் ஒன்ஸ்மோர் ரகம். பின்னணி இசையில் வசனங்களை மியூட் செய்யும் இரைச்சல்களை தவிர்த்திருக்கலாம்.
இடைவேளைக்குப் பிறகாக வரும் டெம்போ கடத்தல் காட்சிகளில் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாமே எடிட்டர் சார்.
அறந்தாங்கி நிஷா முதல் ஜாக்குலின் வரை விஜய் டிவியின் முக்கிய முகங்கள் அத்தனை பேரையும் கேப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் போட்டு பில்லப் செய்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.
ஒரு குடும்பமே சேர்ந்து போதைப்பொருள் கடத்துவதெல்லாம் டூ மச் காட்சிகள். டார்க் காமெடி படங்கள் என்றாலே சிரிப்புக்கு உத்தரவாதம் இருக்காது. வி ஆர் மில்லர்ஸ் என்ற ஹாலிவுட் படத்தின் உல்டா என்று சொல்லப்பட்டாலும் அந்த கலரை மாற்றி கலகலப்பான காமெடிப்படமாக தந்திருக்கிறார்.