தமிழ்சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா? : பரபரப்பை கிளப்பிய பேராசிரியர்!

திரைப்பட இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதி எழுதிய ‘பறவையின் நிழல்’ மற்றும் ‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்’ கவிதை நூல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது.
‘ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக் கூடம்’ நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.
‘பறவையின் நிழல்’ நூலை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பெற்றுக் கொண்டார்.
பட்டிமன்ற பேச்சாளரும் பேராசிரியருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் விழாவுக்கு தலைமையேற்றுப் பேசினார். அவர் பேசும்போது…
“இது உணர்வு பூர்வமான விழா மட்டுமல்ல, பலரையும் பார்க்கிற வாய்ப்பு கிடைத்துள்ள விழா. எப்போதும் என் உலகம் முரண்பாடானது. கல்லூரியில் நான் வகுப்பு எடுத்தால் மாணவன் காது கொடுத்துக் கேட்க மாட்டான். கூட்டங்களில் எப்போது பேசினாலும் காசு கொடுத்துக் கேட்பார்கள். பட்டிமன்றத்தில் நானே பேசிக் கொண்டிருக்க வேண்டும். சினிமாவில் எது பேசினாலும் தப்பு என்கிறார்கள். இப்படியாக முரண்பாடாக உள்ளது என் உலகம். இப்போதெல்லாம் படம் வரும் முன்பே பார்த்து விட்டோம் என்கிறார்கள். அவ்வளவு வேகம்.
பிருந்தா சாரதி நல்ல படிப்பாளி, படைப்பாளி. இவரது கவிதைகளில் பெண்களை அழகாகவும் அறிவாகவும் காட்டிப் பேசுகிறார்.
நம் தமிழ் சினிமாவில் கதாநாயகியைப் பாருங்கள் அவள் லண்டனில் படித்தவளாக இருப்பாள். கதாநாயகன் இவன் ஒர்க்ஷாப்பில் ‘நட்’ கழற்றுபவனாக இருப்பான். அவனிடம் அவள் காதலில் விழுந்து விடுவாள். அப்படி விழுபவள் ‘நட்டு’ கழண்டவளாவே இருக்க வேண்டும். தமிழ்ச் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே கிடையாதா? ஆனால் அப்படித்தான் காட்டுகிறார்கள். ஆனால் இவர் பெண்களை அழகாகவும் அறிவாகவும் தன் கவிதைகளில் காட்டுகிறார்.
பிருந்தா சாரதி இந்த தொகுப்பில் நல்ல கவிதைகள் பலவற்றை எழுதி இருக்கிறார். இப்போதெல்லாம் நல்ல தமிழ் பேசினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். படங்களில் கூட நல்ல தமிழ் பேசினால் அது ஆங்கிலப் படம் என்றாகி விட்டது. ஆங்கிலப் படத்தில் ஜாக்கிசான் கூட ‘யாகாவாராயினும் நாகாக்க’ என்கிறார். ஆங்கிலத்துடன் பேசினால் அது தமிழ்ப்படம் என்றாகி விட்டது.
நம் மரபு எதுகை மோனையுடன் கலந்தது தான். திட்டினால் கூட எதுகை மோனை இருக்கும். ‘கமுக்கமான கத்தாள; காதுல கிடக்குது பித்தாள’ என்று எதுகை மோனையுடன்தான் திட்டுவோம்.
நம் தமிழ் வளத்தை என்றும் மறந்து விடவேண்டாம். கோடீஸ்வரன் பிச்சை எடுக்கலாமா? நம் வளமான மொழி இருக்க வேறு இரவல் மொழி எதற்கு?” என்றவர் விழாவை நகைச்சுவைச் சாரலில் குளிர வைத்தார்.