‘குஷி’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வுபூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
செப்டம்பர் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ரவிசங்கர் யெலமஞ்சலி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி, நிர்வாக தயாரிப்பாளர் தினேஷ், இயக்குநர் சிவ நிர்வானா, நாயகன் விஜய் தேவரகொண்டா, ஒளிப்பதிவாளர் ஜி. முரளி, இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.