லக்கி பாஸ்கர்- விமர்சனம்
வங்கியில் நூதனமாக செயல்பட்டு கோடிகளை குவித்த ஒரு சாமானியனின் கதை
1992-ல் மும்பையில் துவங்கும் கதை, அந்தக் காலத்திற்கு முன்னும் நீள்கிறது. மனைவி மற்றும் மகனோடு கஷ்ட ஜீவனம் நடத்துகிறார் ஹீரோ துல்கர் சல்மான். வங்கியில் நேர்மையாக வேலை செய்யும் அவரிடம், ராம்கி லோன் உதவி கேட்டு வருகிறார். ராம்கியின் டாகுமெண்ட்ஸ் வொர்த்தாக இல்லை என நிராகரிக்கிறார் துல்கர். ராம்கி தன் பிஸ்னெஸ் பற்றிச் சொல்கிறார். ‘கப்பலில் வரும் பொருளை ஒருநாளுக்குள் வாங்கி விற்றால் பெரும் லாபம் கிடைக்கும்’என்கிறார். துல்கர் ஒரு ஐடியா பண்ணி வங்கி பணத்தை ரொட்டேசனாக்குகிறார். வேகமாக வளர்கிறார். அதன்பின் இன்னும் ஆழமாக தொடரும் அவரின் இல்லீகல் ஆக்டிவிட்டி என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது? அவற்றிலிருந்து அவர் எப்படி மீள்கிறார்? என்பதே மீதிக்கதை
கதாநாயகனோ, கதையின் நாயகனோ, எதுவாயிருந்தாலும் அசத்துபவர் துல்கர் சல்மான். தரமாக நடித்துள்ளார். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு சூழலில் வாழும் ஒரு மனிதரை கண்முன் நிறுத்துகிறார். படத்தில் பெரிய பங்கை அவரே எடுத்துக்கொள்வதால் வேறு யாருக்கும் நடிப்பதில் பெரிதாக வாய்ப்பில்லை. இருப்பினும் ஹீரோயின் கேரக்டர், அப்பா கேரக்டர் சிறப்பாக கையாளப்பட்டுள்ளது
படத்தோடு நம்மை கனெக்ட் செய்யும் வேலையை ஒளிப்பதிவாளரும் ஆர்ட் டைரக்டரும் சிறப்பாகச் செய்துள்ளனர். இசை அமைப்பாளர் படத்தின் ப்ளோவை துருத்தாத இசையை வழங்கியுள்ளார். மாண்டேஜ் பாடல் ஓகே ரகம்
இணையம் வளராத காலத்தில் எப்படியெல்லாம் வங்கியில் நூதன கொள்ளை நடந்தது என்பதை படம் தெளிவாக பேசியுள்ளது. மெயின் கதாப்பாத்திரம் தடம் மாறும் சூழலை கதையில் வெகு இயல்பாக ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர். படத்தில் அறத்திற்குள் அகப்படாத விசயங்கள் பேசப்பட்டுள்ளது..ஆனாலும் பேசப்பட்டுள்ள விதம் சிறப்பாக இருப்பதால் லக்கி பாஸ்கருக்கு இந்த தீபாவளி லக்கு தான்
3/5