மாவீரன் கிட்டு – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

maveeran-kittu-review1

RATING 3.8/5

எந்த வித சாதிய உணர்வும் இல்லாமல் நட்பு பாராட்டும்  தமிழக இளைஞர்கள் மத்தியில் கூட டந்த பத்தாண்டுகளாக சாதி வெறி முழுமையாக எட்டிப்பார்க்க ஆரம்பித்து விட்டது.  அதை தூண்டி விட்டதில் அரசியல்’வியாதி’கள் பெரும் பங்கு இருப்பதும், சாதியக் கொலைகள் அதிகரித்து விட்டதும் இங்கே நாம் கண்கூடாக பார்க்கும் நிஜம்.

இப்படி காலம் காலமாக ஏதோ ஒரு உருவில், யாரோ சிலரின் தூண்டுதலில் அரங்கேறி வரும் ஆதிக்க சாதிகளின் சூடு குறையாத சாதி வெறிக்கு சாவு மணி அடிக்க வந்திருக்கும் படம் தான் இந்த ‘மாவீரன் கிட்டு’.

1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கிறது கதை.

இரண்டு ஊர்களுக்கு பொதுவான வழியில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ஆதிக்கச் சாதியினரால் அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களின் இந்த மனோபாவத்தை ஜெயித்து கல்வி உள்ளிட்ட பொருளாதார நிலைகளில் உயர்ந்து அதேபொதுவழியில் நிமிர்ந்து நடப்பதே அவர்களின் கனவு.

அந்தக் கனவு நிறைவேற மாநிலத்திலேயே முதல் மாணவராக ஜெயித்த விஷால் விஷ்ணுவை கலெக்டருக்கு படிக்க வைக்கிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு எல்லாமுமாக இருக்கிற பெரியவர் பார்த்திபன்.

இந்த விஷயத்தைக் கேள்விப்படும் ஆதிக்கச் சாதியினர் விஷாலின் கலெக்டர் கனவுக்கு தடுப்புப் போட முயற்சிக்கிறார்கள். அதில் ஒன்றுதான் தன் சாதிக்காராரான ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவின் அப்பாவை கொலை செய்து விட்டு அந்தப்பழியை விஷ்ணு விஷால் மீது போடுகிறார்கள்.

குட்டக் குட்டக் குனிந்தால் நம்மால் நிமிரவே முடியாது என்று முடிவு செய்யும் பார்த்திபன் ஆதிக்கச் சாதிகளின் சூழ்ச்சி வலையை அறுத்தெறிய யோசிக்கிறார். போலீஸ் கஷ்டடியில் இருந்த விஷ்ணு விஷால் காணாமல் போக, அவரை மீட்டுத்தரக்கோரி பார்த்திபன் தலைமையில் மக்கள் போராட்டம் வெடிக்கிறது.

நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞனாக விஷ்ணு விஷால். நல்ல முறுக்கேறிய உடம்போடு வைராக்கியத்திலும் அவர் காட்டும் உறுதி படத்தின் கிளைமாக்ஸ் வரை நீளுகிறது. அமைதியாகப் போகிற இடத்தில் அமைதியாகவும், திமிர வேண்டிய இடத்தில் திமிரியும் அவர் காட்டுகிற ஆக்‌ஷன் மொழி செம செம.

Related Posts
1 of 9

தாழ்த்தப்பட்ட சமூக மக்களின் நலனுக்காக ஒரு தலைவன் ரேஞ்சில் எல்லாப் பிரச்சனைகளையும் முன்னெடுக்கிற கேரக்டரில் பார்த்திபன். அவருக்கே உரிய நக்கல், நையாண்டியெல்லாம் இல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுகிற கருப்பு சட்டை கெட்டிக்காரராக வாழ்ந்திருக்கிறார்.

நாயகி ஸ்ரீதிவ்யா பார்த்தும், பார்க்காமலும் பட்டும் படாமலும் போன்ற நடிப்பு. ஆதிக்க சாதிப்பெண்களுக்கே உரிய தைரியத்தை காதலில் சொல்வதில் காட்டியிருக்கிறார். படத்தில் வருகிற மற்ற கேரக்டர்களும் நாம் பார்த்து பழகிய கிராமத்து பின்னணி முகங்களாக காட்சி தருகிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக தான் சார்ந்த சாதிக்காரர்களுக்கு மட்டுமே ஜால்ரா அடிக்கிற கேரக்டரில் ஹரீஸ் உத்தமனும், இவனுங்களை இப்படியே விடக்கூடாது என்று ஜாதி வெறியோடு உறுமுகிற கேரக்டரில் நாகிநீடுவும் வில்லத்தனத்தின் உச்சம்.

படத்தில் சூரி இருக்கிறார். சில காட்சிகளில் சில நிமிடங்களில் டயலாக் பேசி விட்டுப் போய் விடுகிறார். காமெடியெல்லாம் இல்லவே இல்லை. அதுவும் நல்லது தான்.

படத்தின் திரைக்கதை வேகத்துக்கு பெரிதும் உதவியிருப்பது யுகபாரதியின் நிஜம் சொல்லும் வசனங்கள். “சோத்துக்கு இல்லாதவனெல்லாம் சோசியலிஸம் பேசுறானுங்க” “ஓட்டுப்போடுறதைத் தவிர நமக்கென்ன உரிமை இருக்கு. அடிக்கிறவன் அடிச்சிட்டே இருப்பான், திருப்பி அடிச்சா திமிருனு சொல்லுறான்”, “விட்டுக்கொடுத்துட்டே இருங்கங்கறீங்க. விட்டுகிட்டேதான் இருக்கோம், அவங்க எப்போ கொடுப்பாங்கனு தெரியலை” ”அதிகாரத்துல இருக்கிறவங்களை தப்புன்னு சொல்லல, அதிகாரமே தப்புன்னு தான் சொல்றோம்” என படம் முழுக்க வரும் வசன வரிகள் சாதிவெறி பிடித்தவர்களின் மூளையைப் பிராண்டி யோசிக்க வைக்கும்!

டி.இமானின் இசை அவருக்கே உரிய அக்மார்க் அதே இசைதான். ‘இளந்தாரி பொண்ணு’ பாடல் மனசுக்கு மயங்கும் மெலோடி.

ஒரு சீரியஸான விஷயத்தை திரைக்கதையாக்கி படமாக்குகிற போது பாடல்களை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே மெதுவாக நகரும் காட்சியமைப்புகளுக்கு மத்தியில் திடீரென்று வருகிற ஸ்பீடுபிரேக்காட்டம் இம்சிக்கிறது பாடல்கள்.

80களின் கதைகளை படமாக்கும் போது அதன் பின்னணியை மிக இயல்பாக காட்ட வேண்டியது பெரும் பொறுப்பாக இருக்கும், அதில் ரொம்பவே மெனக்கிட்டிருக்கிறது ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு.

ஆண்டாண்டு காலமாய் தொடரும் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு என்றைக்கு விடிவு கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் மாவீரன் கிட்டு போன்ற படைப்புகள் தமிழ்சினிமாவில் அடுத்தடுத்து வருவதே அவர்களின் எழுச்சிக்கான வீரிய விதை தான்.

மாவீரன் கிட்டு – மக்களுக்கான பாடம்!