கார்த்திக் நரேன் மிகத்தெளிவான இயக்குநர்
அருண் விஜய்யும் பிரசன்னாவும் இணைந்து நடித்துள்ள படம் மாபியா. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாக இருக்கிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. சந்திப்பில் கலந்துகொண்டு
நடிகர் அருண் விஜய் பேசியதாவது,
“பத்திரிக்கையாளர்களின் எழுத்து தான் என்னை வடிவமைத்தது. உங்களுக்கு நன்றி. 25 வருடம் எனக்கு நிறைய பேர் ஆதரவாக இருந்தார்கள், எனது குடும்பம், ரசிகர்கள் எல்லோரும் பெரிதும் ஆதரவாக உள்ளார்கள். 25 வது வருடத்தில் எனது முதல் படம் “மாஃபியா”. இயக்குநர் கார்த்திக் நரேன் என்னை எப்படி காட்டப்போகிறார் என ஆர்வமாக இருந்தேன். கார்த்திக்கைப் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஒரு படத்தை எப்படி வழங்க வேண்டும் எனபதில் அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அவர் இன்னும் பெரிய அளவில் வர வேண்டும் படக்குழு அனைவருமே பெரும் பலமாக இப்படத்திற்கு உழைத்துள்ளனர்.
இவ்வளவு சீக்கிரத்தில் இப்படம் உருவானதிற்கு பின்னால் பெரும் உழைப்பு இருக்கிறது. லைகா நிறுவனத்தினர் பெரிய ஆதரவாக இருந்தார்கள். கோகுலின் ஒளிப்பதிவு அற்புதம். விவேக்கின் வரிகள் அற்புதமாக இருந்தது. பிரசன்னாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய சந்தோஷம். அவர் அர்ப்பணிப்பு மிக்க நடிகர். இந்தப்படத்தில் நிறைய புது விஷயங்கள் முயற்சி செய்துள்ளேன். ப்ரியா என்னைப் பற்றி நல்லவிதமாக சொன்னதற்கு நன்றி. தமிழ் பேசும் அழகான ஹீரோயின். ஷங்கர் சார் படம் செய்கிறார். மிக ஜாலியானவர். திறமை மிக்க ஒரு நடிகை. அவருக்கு வாழ்த்துகள். இந்தப்படம் எனக்கு மிக முக்கியமான படம். எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. ஒரு புது அனுபவத்தை இந்தப்படம் தரும். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி” என்றார்