விடுவாரா விஷால்… : திருட்டு டிவிடி வேட்டையில் சிக்கியது ‘மனிதன்’!

விஷால் நடித்த ‘மருது’ திரைப்படம் ரிலீசுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கிறது.
”மருது’ படத்தின் திருட்டு டிவிடி வந்தால் அதை வெளியிடுபவர்களை சும்மா விட மாட்டேன்’ என்று சென்ற வாரம் எச்சரிக்கை செய்திருந்தார் விஷால். அதோடு விஜய் நடித்த ‘தெறி’ படம் ஓடிய ஒரு தனியார் ஆம்னி பஸ்சை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
இப்போது இரண்டாவதாக மீண்டும் ஒரு ஆம்னி பஸ்சில் திருட்டு டிவிடி ஓட அதை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். இந்த முறை விஷாலின் வேட்டையில் சிக்கியது உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ திரைப்படம்.
நேற்று இரவு அவினாசியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்த CJS – BSS வண்டி எண் TN37AH7997 என்ற தனியார் பஸ்ஸில் புத்தம் புது திரைப்படமான ‘மனிதன்’ திரைப்படம் ஒளிபரப்புவதை பயணி ஒருவர் நடிகர் சங்க பொது செயலாளர் ‘விஷாலு’க்கு தெரியப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து ‘விஷால்’ மற்றும் பொருளாளர் ‘கார்த்தி’ ஆகியோரின் புகாரின் அடிப்படையில் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர் ‘ஸ்ரீமன்’ மேற்பார்வையில் வீடியோ பைரஸி காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஜெயலட்சுமி IPS அவர்களின் உத்தரவின்படி, காவல்துறை ஆய்வாளர்கள் திரு.மகேந்திரன் மற்றும் திரு.நந்தகுமார் ஆகியோர் இன்று காலை மதுரவாயலுக்கு விரைந்து சென்று பஸ்ஸை மடக்கி பிடித்து அயனாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்திற்கு கிடைத்த புகாரின் அடிப்படையில் தனியார் பஸ்ஸில் புதிய படம் ஒளிபரப்புவதை பிடிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.