மன்னர் வகையறா – விமர்சனம்
RATING – 3/5
நடித்தவர்கள் – விமல், ஆனந்தி, பிரபு, ஜெயப்பிரகாஷ், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், சரண்யா பொன்வண்ணன், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர்
இசை – ஜாக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு – பி.ஜி.முத்தையா
இயக்கம் – பூபதி பாண்டியன்
வகை – காமெடி, நாடகம், காதல்
சென்சார் சர்ட்டிபிகேட் – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 30 நிமிடங்கள்
காதல், மோதல், ஃபேமிலி செண்டிமெண்ட் என மூன்று குடும்பங்களுக்கிடையே நடக்கும் சம்பவங்களோடு விமலை கமர்ஷியல் ஹீரோவாக கலர் மாற்றியிருக்கும் படம் தான் இந்த ‘மன்னர் வகையறா.’
அண்ணன் குடும்பத்தோடு ஏற்பட்ட பகையை சரி செய்ய அவருடைய மூத்த மகனுக்கு தனது மூத்த மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
இந்த விஷயத்தைக் கேள்விப்படும் பக்கத்து ஊரைச் சேர்ந்த பெரிய குடும்பமான பிரபுவின் மூத்த மகனும் ஹீரோ விமலின் அண்ணனுமான கார்த்திக் குமார் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார்.
அந்த தற்கொலை முயற்சியிலிருந்து தனது அண்ணனைக் காப்பாற்றி அவள் ஆசைப்பட்ட பெண்ணான சாந்தினி தமிழரசனையே திருமணம் செய்து வைக்கிறார் ஹீரோ விமல்.
இதனால் அதே மாப்பிள்ளைக்கு நாயகன் விமலின் காதலியும் தனது இளைய மகளுமான நாயகி ஆனந்தியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் சரண்யா பொன்வண்ணன்.
இந்த இக்கட்டான சூழலை எப்படி சமாளித்து தனது காதலியை விமல் கரம் பிடித்தார்? என்பதே மீதிக்கதை.
இதுவரை கதையின் நாயகனாக பல படங்களில் அரிதாரம் பூசிய விமல் இதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் பிளஸ் கமர்ஷியல் ஹீரோவாக கலர் மாறியிருக்கிறார். அவருடைய லுக்குக்கு ஆக்ஷன் காட்சிகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை என்றாலும் அவருடைய முந்தைய படங்களில் இருக்கும் யதார்த்த ஹீரோ என்கிற இமேஜுடன் இந்தக் கேரக்டரில் அவருடைய நடிப்பைப் பார்ப்பது ரசிகர்களுக்கு புதிய ரசனையாக இருக்கும்.
வக்கீல் தொழிலுக்குப் படிக்கும் விமல் எப்படியும் அந்தத் தேர்வில் பாஸாகி விடுவார் என்று ஊரில் உள்ளவர்களிடம் வம்படியாக வம்பு, தும்புகளை இழுத்துக் கொண்டே விமலுடன் சேர்ந்து அலப்பறை கொடுக்கும் ரோபோ சங்கர் காமெடிக்கு கை கொடுக்கிறார். வழக்கமாக விமல் படங்களில் அவருடன் சூரி தான் காமெடி செய்வார். இதில் அவருக்குப் பதில் வடிவேலு உடல்மொழிகளுடன் சிரிக்க வைக்கிறார் ரோபோ சங்கர். சிங்கம் புலியும் தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.
‘கயல்’, ‘சண்டி வீரன்’, ‘விசாரணை’ என இதுவரை நடித்த படங்களில் ஒரு அப்பாவிப் பெண் போல பரிதாபமான நாயகியாக காட்சி தந்த ஆனந்தி இதில் கலகலப்பான நாயகியாக கேரக்டரை மாற்றியிருக்கிறார். ஆனந்திக்கு இப்படியும் நடிக்கத் தெரியும் என்பதை காட்டும் விதமாக விமலை அவர் செம கலாய் கலாய்ப்பதும், குறும்புத் தனங்கள் செய்வதுமாக அசத்தியிருக்கிறார்.
ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் ”அவ அவ கடன் தொல்லையில தான் விஷம் குடிப்பானுங்க… ஆனா இவனுங்க விஷம் குடிக்கிறதுக்கே கடன் சொல்றானுங்க…” என்று பஞ்ச் பேசி கைத்தட்டல்களை அள்ளுகிறார் யோகிபாபு.
சரண்யா பொன்வண்ணனின் கோபக்கார அண்ணன் என்று ஒருவரை படம் முழுக்க பில்டப் பண்ணி பேசுகிறார்கள். ஆனால் அவரை திரையில் ஒரு காட்சியில் இயக்குநர் காட்டவில்லை. யாருப்பா அந்த அண்ணன்? என்கிற அவரைப் பற்றிய படம் முடிந்ததும் மறக்காமல் எல்லோருக்குள்ளும் எழுகிறது.
காதல், மோதல், ஃபேமிலி செண்டிமெண்ட், ஆக்ஷன் என்கிற கமர்ஷியல் கலவையான படமென்பதால் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், வம்சி கிருஷ்ணா, நீலிமா ராணி என படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். எல்லோரும் அவரவர்களுக்கு கொடுத்த கேரக்டரை மிகச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.
கிளைமாக்ஸில் ஒரே ஒரு காட்சியில் எண்ட்ரி கொடுக்கிறார் பிக்பாஸ் புகழ் ஜுலி. அவர் எண்ட்ரி கொடுக்கும் அந்தக் காட்சியில் கைதட்டல்களும், விசில் சத்தங்களுக்கு எழுமென்று பார்த்தால் தியேட்டரே சைலண்ட்டாக இருக்கிறது. (ரசிகர்களுக்கு இன்னும் ஜூலி மேல இருக்கிற கோபம் போக போல..?)
ஜாக்ஸ் பிஜாயின் இசையில் இளைஞர்களின் குத்தாட்ட பாடலாக இருக்கும் ”அண்ணனைப் பத்தி கவலையில்ல…” உட்பட பாடல்கள் எல்லாமே ஏற்கனவே கேட்ட ரகம் தான்.
சூரஜ் நல்லுசாமி – பி.ஜி.முத்தையா இரட்டையர்களின் ஒளிப்பதிவு கூடுதல் பலம். வழக்கமான கமர்ஷியல் படமென்பதால் படத்தின் மிதமிஞ்சிய நீளம் படம் பார்ப்பவர்களுக்கு கட்டாயம் எரிச்சலைத் தரும். நீண்ட நேரம் தியேட்டரில் இருந்த உணர்வைத் தரக்கூடும். யோசிக்காமல் முதல் பாதியில் 15 நிமிடங்களுக்கு எடிட்டர் கோபி கிருஷ்ணா ‘கத்தரி’ போடுவது நலம்.
குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைத்த இயக்குநர் பூபதி பாண்டிய காமெடி என்ற பெயரில் முகம் சுளிக்க வைக்கும் டபுள் மீனிங் வசனங்களை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம்.
மன்னர் வகையறா – குடும்பத்தோட சிரிச்சிட்டு வரலாம்!