சினிமாவை சீரழிக்கிறார் பிக்பாஸ் கமல்! : மன்சூரலிகான் சாடல்
ஜி.எஸ்.டி.யைப் பற்றித்தான் நாடே பேசிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கொந்தளிப்பான மனநிலையை மறக்கடிக்கும் விதமாக விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பற்றி பேச வைத்திருக்கிறார் அதை முன்னின்று நடத்தும் கமல்ஹாசன்.
ஆதரவை விட எதிர்ப்பு அதிகமாகி விட்ட அந்த நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி போராட்டங்கள் கூட நடைபெற்று வரும் நிலையில் பிரபலங்களும் அந்த நிகழ்ச்சியைப் பற்றி மேடையில் எரிச்சலாகப் பேசத் தொடங்கி விட்டனர்.
அதிலும் மனதில் பட்டதை எந்த மேடையாக இருந்தாலும் பேசும் மன்சூர் அலிகான் பிக் பாஸ் நிகழ்ச்சியையும், அதை நடத்தும் கமலையும் கடுமையாகச் சாடினார்…
ஏ.பி.கே பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க ”கோலி சோடா” படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கும் “உறுதி கொள்” படத்தின் ஆடியோ விழாவில் தான் இந்த பரபரப்பை பற்ற வைத்தார் மன்சூர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆரி ”கமலஹாசன் முன்பு எடுத்த முடிவை இப்போது நாம் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிடுவதால் ஜி.எஸ்.டி மற்றும் மாநில வரி செலுத்த வேண்டி இருக்கும் இதையே தயாரிப்பாளர் சங்கமே ஒரு அப்ளிகேஷனை தயாரித்து அதன் மூலம் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு படங்களை வெளியிடுவது தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாக இருக்கும்” என்று கமலுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க அடுத்து பேச வந்த மன்சூரோ கமலை கிழித்து தொங்க விட்டார்..
”தியேட்டரில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்கு சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும்.
சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. சினிமாக்காரர்கள் தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.விகாரங்க ஏதோ படி அளக்கிறாங்க. அவங்க கஷ்டம் தீரட்டும் பரவாயில்லை.
ஆனால் கமல் மாதிரி சாதனை கலைஞர் இது மாதிரி நிகழ்ச்சி மூலம் சினிமாவை அழிக்க காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி இரவு காட்சிக்கு தியேட்டருக்கு வருகிற கூட்டம் கட். அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலை காட்சிகளும் கட். ஆக எல்லா காட்சிகளுமே அவுட்.
நாளை கமல் படம் வெளிவரும் போது அஜீத்தோ, விஜய்யோ இது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்தி அதனால் அவரது படத்தின் வசூல் பாதித்த என்னாகும் அவர் யோசிக்க வேண்டும்” இவ்வாறு மன்சூரலிகான் பேசினார்.