மீண்டும் ஒரு காதல் கதை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

Meendum1

RATING : 2.2/5

2012-ஆம் ஆண்டு மலையாளத்தில் 3.5 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு 36 கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிய ‘தட்டத்து மறையத்து’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ‘மீண்டும் ஒரு காதல் கதை’.

குட்டிப் பையனாக இருக்கும் போதே அழகான இஸ்லாமிய  குட்டிப்பெண்ணான இஷா தல்வார் மீது காதல் வயப்படுகிறார் வால்டர் பிலிப்ஸ்.

கட்டினால் அப்படி ஒரு அழகான பெண்ணைத்தான் கட்ட வேண்டும் என்பது அவருடைய ஆசை. வளர்ந்து இளைஞன் ஆன பிறகு ஒரு திருமண வீட்டில் மீண்டும் இஷாவைப் பார்க்கும் வால்டர் அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

இஷா வால்டரை திருமணம் செய்யும் முடிவுக்கு வந்து விட்டாலும் இஷாவின் கட்டுக்கோப்பான குடும்பத்தில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்புகிறது. விஷயம் இஷாவின் அப்பாவும், பெரிய கையுமான நாசருக்குத் தெரிய வர கடுப்பாகும் அவர் வால்டரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய் விடுகிறார்.

அங்கே வால்டரை பிரித்து மேய்வார்கள் என்று பார்த்தால் மனோஜ் கே ஜெயன், சிங்கமுத்து உள்ளிட்ட காக்கிகள் உன்னோட காதல் உண்மையாக இருந்தால் நானே உங்களை சேர்த்து வைக்கிறேன் என்று உத்திரவாதம் தருகிறார்கள்.

தனது காதல் கதையை ப்ளாஷ்பேக்கில் சொல்கிறார் வால்டர். மதம் என்கிற பெரிய தடுப்பணையைத் தாண்டி காதல் ஜோடி ஒன்று சேர்ந்ததா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோவாக வரும் வால்டர் ப்லிப்ஸ் காதல் கதைக்கேற்ற நாயகனாக இருந்தாலும் அவரது நடிப்புத் திறமைக்கு படத்தில் அவ்வளவாக ஸ்கோப் இல்லை என்பது உண்மை. சதா எந்த நேரமும் இஷா தல்வார் பின்னால் சுற்றுவதையே படம் முழுக்க செய்து கொண்டிருக்கிறார். அதைத்தாண்டி நடனத்தில் தேர்ச்சி காட்டுகிறார்.

Related Posts
1 of 2

இயக்குநர் செய்திருக்கும் உருப்படியான வேலை என்றால் அது நாயகி இஷா தல்வாரின் செலெக்‌ஷன் தான். அது கூட ஒரிஜினல் படத்தில் அவரே நாயகி என்பதால் அந்த க்ரிடிட் கூட மலையாள இயக்குநருக்கே சென்று விடும். அச்சு அசல் ஒரு இஸ்லாமியப் பெண் கதாபாத்திரத்தில் வரும் அவர் குளோசப் காட்சிகளில் தக தக தங்கமென ஜொலிக்கிறார். வசனங்களை தவிர்த்து உடல் மொழிகளாலேயே நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.

மனோஜ் கே ஜெயன் உள்ளிட்ட போலீஸ்காரர்கள் அந்த பேருக்குரிய வேலைகளை படத்தில் எந்த சீனிலும் செய்வதாக இல்லை. மாறாக ஏதோ பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கதை கேட்பது போல நாயகனை போலீஸ் ஸ்டேஷனில் உட்கார வைத்து அவருடைய காதல் கதையை கேட்கிறார்கள். நாயகனுக்கு அர்ஜீனனும் நாயகிக்கு வித்யூலேகா ராமனும் அவர்கள் காதலுக்கு உதவும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

முதல் பாதி முழுக்க ஐந்து பாடல்களைப் போட்டு நிரப்பியிருக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் மெலடி ரகம். சில பாடல்கள் ஏற்கனவே கேட்டு சலித்த ரகமும் கூட…

படத்தில் கைதட்டிப் பாராட்ட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் விஷ்ணு வர்மா தான். அவருடைய ப்ரெஸ்ஸான ஒளிப்பதிவில் நாயகி மட்டுமல்ல… ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் கூட அழகாகத் தெரிகிறார்.

எல்லா இளவட்டங்களும் ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என்று அப்டேட் ஆகிவிட்ட இந்த காலகட்டத்தில் இப்படத்தின் நாயகனும், நாயகியும் வீட்டிலிருக்கும் லேண்ட்லைனிலேயே காதலை வளர்ப்பதெல்லாம் காலத்தோடு ஒன்றாத ஒன்று.

”பர்தாவை வெச்சு பெண்களோட உடம்பை வேணும்னா மூடலாம், ஆனா மனசை மூட முடியாது.” ”இங்க முடிவெடுக்கிற அதிகாரம் நம்மகிட்ட இல்லாதப்ப நாம ஆசைப்பட்டு என்ன பிரயோசனம்?” போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கின்றன.

இப்படித்தான் இந்தக் காதல் முடியும் என்கிற விபரம் படம் பார்க்கிற எந்த ரசிகனும் யூகித்து விட முடியும். அந்தளவுக்கு எந்த புதுமையோ, ட்விஸ்ட்டோ திரைக்கதையில் இல்லாதது பெருங்குறை. சரி காதல் தான் அப்படியென்றால் மருந்துக்காவது காமெடி இருக்கிறதா என்றால் அதுவும் கூட இல்லை. இதற்கு முன்பு வந்த மித்ரன் ஆர் ஜவஹர் படங்களில் காதலோடு, காமெடி, செண்டிமெண்ட் ஆகியவை எக்ஸ்ட்ராவாக இருக்கும். ஆனால் இதில் காதலைத்தாண்டி எதுவுமே இல்லை. அது மட்டும் சேர்ந்திருந்தால் மித்ரன் ஜவஹருக்கு மீண்டும் ஒரு ஹிட் படம் அமைந்திருக்கும்!

‘மீண்டும் ஒரு காதல் கதை’ – லவ்வர்ஸ் ஸ்பெஷல்!