”சத்தியமா படம் நல்லா இருக்குங்க…” – ‘மிக மிக அவசரம்’ படத்துக்கு சர்ட்டிபிகேட்!
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள மூன்றாவது படம் ‘மிகமிக அவசரம்’. அதுமட்டுமல்ல இந்த படத்தின் மூலம் முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார் சுரேஷ்காமாட்சி.
இப்படத்தில் நாயகியாக ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். அரீஷ்குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல்துறை உயரதிகாரியாகவும் நடித்துள்ளனர்.
முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், அரவிந்த், லிங்கா, சாரதி, இயக்குநர் சரவண சக்தி, வெற்றிக்குமரன், வி கே சுந்தர், குணசீலன், மாஸ்டர் சாமுண்டி உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இன்று சமூகத்தில் பெரும்பாலும் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இப்படி சூழல் மாறினாலும், வேலைக்கு செல்லும் பெண்களின் அவல நிலை மட்டும் மாறவே இல்லை. ஆம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகளை அவர்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.
அந்த வகையில் ‘மிக மிக அவசரம்’ படத்தில் காவல்துறையில் சாதாரண பொறுப்பில் பணியாற்றும் ஒரு இளம் பெண் போலீஸ், அந்த துறையில் சந்திக்கும் மிக நுட்பமான பிரச்சனைகளை இந்தப்படத்தில் விரிவாகவும் பட்டவர்த்தனமாகவும் அலசியிருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி.
இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் அதிகாரிகளுக்கு இந்தப்படம் திரையிடப்பட்டது.
சான்றிதழ் கொடுப்பதற்காக பார்க்கிற எல்லாப் படங்களையுமே பாராட்டிச் செல்வது சென்சார் அதிகாரிகளின் வழக்கம். அப்படித்தான் இந்தப் படத்தையும்
பார்த்த அதிகாரிகள் படத்தில் எந்தவித திருத்தங்களும் சொல்லாமல் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் விதமாக ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். அதோடு படம் சிறப்பாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் தயாரிப்பாளரும், இயக்குனருமான சுரேஷ் காமாட்சியோ ”நீங்க பார்க்கிற எல்லாப் படங்களையும் தான் பாராட்டுகிறீர்கள். அப்படித்தான் என் படத்தையும் பாராட்டினீர்களா?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு அதிகாரிகள் ”அது வழக்கமான ஒன்று தான். ஆனால் சத்தியமா இந்தப்படம் ரொம்ப நல்ல படம்ங்க. எங்கள் பாராட்டை வழக்கமான பாராட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று சொல்லி விட்டுச் சென்றார்களாம்.
சென்சார் அதிகாரிகள் சொல்லும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக ஏற்கனவே இந்தப் படத்தை பார்த்து இயக்குனர்கள் பாரதிராஜா, ராஜூ முருகன், வெற்றி மாறன், வெங்கட் பிரபு ஆகியோர் சுரேஷ் காமாட்சியை மனதாரப் பாராட்டியிருக்கிறார்கள்.
இதில் இயக்குனர் வெற்றிமாறன் ஒருபடி மேலேசென்று தனது பேனரிலேயே படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தியிருக்கிறது.