மொட்ட சிவா கெட்ட சிவா – விமர்சனம்
RATING 2.5/5
தமிழில் சலிக்கச் சலிக்க பார்த்த ஒரு மசாலாப் படத்தைச் சொல்லுங்கள் என்றால் உடனே எந்தப்படம் என்று யோசிக்க ஆரம்பித்து விடுவோம். ஏனென்றால் அந்த எஸ்க்ட்ரீம் லெவல் டேஸ்ட்டெல்லாம் அண்டை மாநிலமான ஆந்திரா ரசிகர்களுக்கே உரித்தானது.
அப்படிப்பட்ட தெலுங்கு தேசத்தில் 2015ம் ஆம் ஆண்டு ரிலீசான ‘பட்டாசு’ தமிழில் பிரதியெடுக்கப்பட்டு ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா.’
ஆள் நடமாட்டமில்லாத காட்டுப்பகுதி ஒன்றில் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் லாரன்ஸ் அதே காட்டுப்பகுதியில் கொள்ளைக் கூட்டத்திடம் சிக்கிக் கொள்ளும் சென்ட்ரல் மினிஸ்டர் விடிவி கணேஷைக் காப்பாற்றுகிறார். அதற்கு பலனாக அவர் விருப்பப்பட்டபடியே சென்னைக்கு அசிஸ்டெண்ட் கமிஷனராக ட்ரான்ஸ்பர் வாங்கிக் கொள்கிறார்.
வந்தவர் கொலை, கொள்ளை, ரெளடியிஷத்தை ஒழித்துக் கட்டுவார் என்று நினைத்தால் தாதா அஷீடோஷ் ராணா செய்யும் அந்த அத்தனை கிரிமினல் வேலைகளையும் அவரோடு கூட்டு சேர்ந்து செய்கிறார்.
சென்ட்ரல் மினிஸ்டரின் ரெகமெண்ட் என்பதால் லாரன்ஸின் அத்துமீறல்களைப் பார்த்து ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்தபடி இருக்கிறார் சிட்டி கமிஷனர் சத்யராஜ்.
அதே சென்னையில் பெரிய தாதாவாக இருக்கிற அஷுடோஷ் ராணாவின் தம்பியான வம்சி கிருஷ்ணாவும், அவரின் நண்பர்களும் சேர்ந்து ஓர் இரவில் அப்பாவி இளம் பெண் ஒருவரை கற்பழித்து கொலை செய்து விடுகிறார்கள்.
மாற்றுத் திறனாளியான அந்த இளம் பெண் மீது அதிக பாசம் வைத்ததிருக்கும் லாரன்ஸ் அவர் கொலை செய்யப்பட்ட கொடூரத்தைக் கேள்விப்பட்டு அத்தோடு அந்த கெட்ட சிவா கேரக்டருக்கு குட்பை சொல்லி விட்டு, இன்டர்வெல்லுக்குப் பிறகு நல்லவனாகி மொட்ட சிவாவாக மாறி எந்த தாதாவுடன் கூட்டுச் சேர்ந்து அட்டூழியங்களைச் செய்தாரோ? அதே தாதாவான அஷீடோஷ் ராணாவையும், அவன் தம்பி வம்சி கிருஷ்ணாவையும் புரட்டியெடுப்பதே கிளைமாக்ஸ்.
பட்டாசில் இருந்த அதிகப்படியா மசாலாவே தமிழ்ப்பட ரசிகர்களுக்கு உச்சக்கட்ட நெடியாக இருக்கும். இந்தப்படமோ 10 பட்டாசுகளை ஒரே படத்தில் பார்த்த நெடி. மூச்சு முட்ட வைக்கிற அளவுக்கு கலவையாக்கி அரைத்துத் தள்ளியிருக்கிறார் இயக்குநர் சாய் ரமணி.
மாஸ் ஓப்பனிங், பஞ்ச் டயலாக்ஸ், செண்டிமெண்ட், காமெடி, லவ், பரபர ஆக்ஷன் என ஒரு மசாலா படத்துக்குரிய அத்தனையும் இந்தப் படத்தில் இருக்கிறது. ஆனால் எல்லாமே ஓவர் டோஸ்.
டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்கிற பட்டம் லாரன்ஸ் பெயருக்கு முன்னால் போடப்பட்டதும் விசில் சத்தங்களும், கை தட்டல்களும் தியேட்டரை அதிர வைக்கிறது. அப்போது போடுகிற காதைக் கிழிக்கிற பின்னணி இசை நொடிக்கு நோடி அதே ஸ்பீடில் கிளைமாக்ஸ் வரை நம்மை புரட்டியெடுக்கிறது. வழக்கமான லாரன்ஸ் படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ? அதெல்லாமே இதிலும் இருக்கிறது.
படத்தில் ஓப்பனிங் சீனில் கால் சூவின் அடிப்பக்கத்தை ஸ்க்ரீன் முழுக்க காட்ட ஆரம்பிக்கிற லாரன்ஸ் அதன்பிறகு வருகிற சீன்களில் கொடுக்கிற பில்டப்புகளிலும், காட்டுகிற ஸ்டைல்களிலும் ரஜினியே தோற்று விடுவார் போல… அந்தளவுக்கு ரவுண்டு கட்டியடிக்கிறார்.
லேடி ரிப்போர்ட்டராக வருகிறார் நாயகி நிக்கி கல்ராணி! பாடல் காட்சிகளில் லாரன்ஸூக்கு இணையாக நடனத்தில் வேகம் காட்டுகிறார், கவர்ச்சியையும் வாரி இறைத்திருக்கிறார். ‘ஹரஹர மகாதேவகி’ பாடலில் கவர்ச்சியின் மொத்த குத்தகைத் தாரராக வந்து கிறங்கடித்து விட்டுப் போகிறார் ராய் லட்சுமி.
சதீஷ், கோவை சரளா, சாம்ஸ் மூன்று பேர் இருந்தும் படத்தில் அவர்களில் அலப்பறைகளில் மனசு விட்டு சிரிக்க முடியாமல் போவது பெருத்த ஏமாற்றமே.
படம் முழுக்க லாரன்ஸ் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் காக்கி சட்டையில் வருவதை விட அது இல்லாமல் வருகிற மப்டி ட்ரெஸ் காட்சிகளே அதிகம். இளைஞர்களின் காவலன், விவசாயிகளின் தோழன் என்று லாரன்ஸுக்கு ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பேனர் வைத்து வரவேற்கிறார்கள். ஆனால் அவரோ படத்தில் ஸ்டைலாக சிகரெட்டை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு உருண்டை உருண்டையாக புகை விட்டபடியே கெத்தாக வருகிறார். இதெல்லாம் எந்த மாதிரியான சமூகப்பொறுப்பின் டிஸைன் என்பது லாரன்ஸூக்கே வெளிச்சம்!
“கூட்டி கழிச்சு பாரு கணக்கு கரெக்டா வரும் என்பது அண்ணே மொழி… எவ்வளவுதான் கூட்டினாலும் எவ்வளவு தான் கழிச்சாலும் கணக்குலயே வரமாட்டேன் என்பது தம்பி மொழி…” இப்படி படம் முழுக்க வரும் பழமொழியும் புதுமொழியுமாக கலந்த வசனங்களை வஞ்சனையில்லாமல் எழுதித் தள்ளியிருக்கிறார்கள் இயக்குநர் சாய் ரமணியுடன் ‘உதிரிப்பூக்கள்’ கொடுத்த மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும்!
நொடிக்கு நொடி ஹாட்ட் பீட்டை எகிற வைக்கிற அம்ரீஷின் பின்னணி இசையும், தர லோக்கலாக குத்தாட்டம் போட வைக்கிற பாடல்களும், அதற்கு லாரன்ஸ் போட்டிருக்கும் கலக்கலான டான்ஸும் செம செம செம!
பெரிய பெரிய செட்டுகளை கலர்புல்லாகக் காட்டியிருக்கிறது சர்வேஸ் முராரியின் ஒளிப்பதிவு. ஆக்ஷன் படத்துக்கே உரிய நறுக்கல்களை கச்சிதமாகச் செய்திருக்கிறது பிரவீன் கே.எல்லின் கத்தரி.
தெலுங்குப் படத்தின் ரீமேக் என்பதாலோ என்னவோ? படத்தில் ரசித்து லயிக்கிற புதுமைகள் என்று எதுவுமில்லை. ஆனால் ஒரு மசாலா படத்துக்குரிய அத்தனையையும் அள்ளிபோட்டு கடுகளவு லாஜிக்கைக் கூடப் பார்க்காமல் லாரன்ஸூக்கு ஒரு ரசிகராகவே மாறி மாஸ் மூச்சு முட்டுகிற அளவுக்கு மசாலாப் படமாகத் தந்திருக்கிறார் இயக்குநர் சாய் ரமணி.
மொட்ட சிவா கெட்ட சிவா – மூச்சு முட்ட வைக்கும் மசாலா நெடி!