பெட்டிக்குள் போன போத்ரா வழக்கு : தடைகளை உடைத்து ரிலீசாகிறது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’

Get real time updates directly on you device, subscribe now.

”மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்துக்காக ஏழரை கோடி ரூபாய் பைனான்ஸ் கொடுத்தேன். வட்டியோடு சேர்த்து 11 கோடி ரூபாய் எனக்கு வர வேண்டும். அதைத் தராமல் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது” என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரபல சினிமா பைனான்சியர் போத்ரா.

ஆனால் வேறு ஒருவருக்கு கடன் கொடுத்து விட்டு அதை இந்தப் படத்துக்குத்தான் கொடுத்தேன் என்று கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் வழக்கு போட்டிருப்பதாக ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ தரப்பில் சொல்லப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த போத்ரா ”எனது பாக்கியை தராமல் படம் ரிலீசாகாது. அப்படி ஆகிவிடுமென்று வேண்டுமென்றே மீடியாக்களில் செய்திகளை பரப்புகிறார்கள்” என்று பேட்டி கொடுத்திருந்தார். அவர் பேட்டி கொடுத்து 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் ”மொட்ட சிவா கெட்ட சிவா படம் ரிலீசாக எந்தத் தடையும் இல்லை” என்று கூறியிருக்கிறது நீதிமன்றம்.

அந்த சந்தோஷ செய்தி கிடைத்தவுடன் தாமதிக்காமல் மீடியாக்களை சந்தித்தது திரைப்பட உரிமையாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களுடன் ஹீரோ லாரன்ஸ், இசையமைப்பாளர் அம்ரீஷ், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, டி.சிவா இயக்குநர் சாய் ரமணி உள்ளிட்ட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படக்குழு.

Related Posts
1 of 19

சந்திப்பில் பேசிய இயக்குநர் சாய் ரமணி “ எதற்காகவென்று தெரியவில்லை. இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை எப்படியாவது வெளியிட விடாமல் தடுத்து விட வேண்டுமென்று சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். தடை செய்கிற அளவுக்கு இந்தப்படம் என்ன அவ்வளவு மோசமான படமா? இல்லை எதற்காக அப்படி ஒரு வேலையைச் செய்கிறீர்கள்?

இந்தப்படம் எப்போது வரும்? எப்போது வரும்? என்று லாரன்ஸ் மாஸ்டரின் ரசிகர்கள் ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கில் என்னிடம் கேட்பார்கள். அவர்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.

இந்தப் படத்தால் நான் பட்ட மன வேதனைகள் கொஞ்ச நஞ்சமில்லை. ஒரு படத்தில் நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பிருக்கிறது. அதையெல்லாம் தெரியாமல் தடை செய்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு மேலும் பொறுக்க மாட்டேன். இனி யாராவது இந்தப் படத்தை தடை செய்ய நினைத்தால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 2000 பேரோடு போராட்டத்தில் இறங்குவேன் என்று எச்சரித்து விட்டு அமர்ந்தார் சாய் ரமணி.

நிகழ்ச்சியில் பேசிய ஹீரோ லாரன்ஸ் ”இந்தப்படம் வெளியாகாமல் இருப்பதில் என் அம்மாவுக்கு ரொம்ப வருத்தம். அதனால் யாருக்காக வருகிறதோ? இல்லையோ? அவருக்காக இந்தப்படம் வர வேண்டும். இவ்வளவு தர்மம் செய்கிறோம். அப்படியிருந்தும் நமக்கு ஏன் கடவுள் இவ்வளவு சோதனைகளைத் தருகிறார் என்று நினைப்பேன். ஆனாலும் நான் தர்மம் செய்வதை நிறுத்தப் போவதில்லை. கண்டிப்பாக அது என்னைக் காக்கும்” என்றார்.

அதன்படி பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்ட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ இந்த பிப்ரவரி மாதம் 10-ம் தேதி கண்டிப்பாக ரிலீசாகும் என்றார் தயாரிப்பாளர் டி.சிவா.