தேர்தலில் பின் வாங்கப் போவதில்லை – விஷால் : தேர்தல் நடக்கிறதா என்று பார்க்கலாம்? – சிம்பு

இன்று நண்பகல் 12 மணியளவில் தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்கள் எல்லாம் இணைந்து விஷால் அணியினருக்கும், சரத்குமார் அணியினருக்கும் வருகிற 10 ஆம் தேதி சமாதானப் பேச்சு வார்த்தையை நடத்த இருக்கிறோம் என்று கூட்டாக அறிக்கை விட்டனர்.
அந்த அறிக்கை வந்த சில மணி நேரங்களிலேயே சரத்குமார் தலைமையிலான அணியைச் சேர்ந்த சிம்பு, ராதிகா உள்ளிட்ட நான்கைந்து பேர் பத்திரிகையாளர்களை அவசரமாக சந்தித்தனர்.
சந்திப்பில் பேசிய ராதிகா விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்தார். துபாயில் ஒரு சம்பவம் நடந்தது. அதன்பிறகு தான் பிரச்சனை பெரிதாக ஆரம்பித்தது. கமல், ரஜினி யாருமே இந்த விவகாரத்தில் சமாதானம் பேச முன்வரவில்லை. என்று பேசிய ராதிகா ஒரு கட்டத்தில் நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம், எங்களுக்குள் விஷால் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று குற்றம் சாட்டியதோடு விஷாலை ‘விஷால் ரெட்டி’ என்று சாதியைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அடுத்து பேசிய சிம்புவோ விஷாலை அவன், இவன், உனக்கென்ன தகுதியிருக்கிறது? நீ நாய் இல்லை நரி என்றெல்லாம் கோபத்தோடு ஒருமையில் பேசிவிட்டு அமந்தார்.
அப்போது நிருபர் ஒருவர் இந்தத் தேர்தலில் ‘சமாதானப் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை’ என்று விஷால் கூறியிருக்கிறாரே? என்றார்.
அதற்கு பதிலளித்த சிம்பு ‘முதலில் தேர்தல் நடக்கிறதா என்று பார்க்கலாம்?’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கிடையே திரைப்பட சங்கங்களின் கூட்டறிக்கைக்கு விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் சில நிமிடங்களுக்கு முன்பு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது :
வருகிற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி போட்டியிடுவது அனைவரும் அறிந்ததே. வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து, மனுவை திருப்பி பெறுவதற்கான காலக்கெடு இன்றோடு நிறைவடைகிறது.
தேர்தல் வர இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கக்கூடிய நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கம், தொழிலாளர் சம்மேளனம் இணைந்து உருவாக்கிய கூட்டறிக்கை எங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது பார்த்து நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் அனைவரின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஆனால் இந்த தேர்தல் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டு விடும் என்கிற உங்களது பயம் எதற்காக என்று தெரியவில்லை. அந்த பயத்திற்கு சில விளக்கம் அளிப்பது எங்களது கடமையாக நினைக்கிறோம்.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று குறைந்த பட்சம் 27 சங்கங்கள் இருக்கிறது. அனைத்து சங்கத்திற்கும் 3 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடந்து கொண்டு இருக்கிறது. தேர்தல் முடிந்து இன்று வரை எல்லோருமே ஒற்றுமையாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் 10 வருடம் தேர்தலே நடக்காத நடிகர் சங்கத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் ஜனநாயாக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்கிற எங்கள் பாண்டவர் அணியின் மூலம் நடிகர் சங்கம் பிளவுப்பட்டு விடும் என்கிற உங்களது பயம் எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் கூட கடந்த முறை தேர்தல் நடந்த போது நீங்கள் நீதிமன்றம் சென்று தடை உத்தரவு வாங்கி, அதன் பிறகு தேர்தலை நடத்தி இப்போது நீங்கள் பதவியில் இருக்கிறீர்கள்! ஒற்றுமையாகவும் இருக்கிறீர்கள்! இப்படி, உங்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஜனநாயக தேர்தல் எங்களுக்கு மட்டும் ஏன் பொருந்தாது? என்று நினைக்கிறீர்கள். நீங்கள் ஒற்றுமையாக இருப்பது போல் நாங்கள் மட்டும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது ?
நடிகர் சங்க தேர்தலில் எங்களால் மட்டும் பிளவு ஏற்படும் என்று நீங்கள் குழம்புவது ஏன் என்று புரியவில்லை. நடிகர் சங்க தேர்தலின் வேட்புமனு தாக்கல் முடிந்து இறுதி பட்டியலும் தயாராகி விட்டது. தபால் ஓட்டு போடுபவர்களுக்கான அந்த மனுவை தேர்தல் அதிகாரி அனுப்பப்படவுள்ள இந்த நிலையில், பாண்டவர் அணியால் மட்டும் நடிகர் சங்கம் பிளவுபட்டு விடும் என்ற உங்கள் அறிக்கை எங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது, மன வருத்தத்தையும் அளிக்கிறது .
இந்த கருத்தை எங்களிடம் சொல்வதை விட கடந்த 10 வருடங்களாக தேர்தலில் நிற்காமலேயே பதவியில் இருப்பவர்களிடம் சொன்னால், நல்லதை செய்ய துடிக்கும் இந்த பாண்டவர் அணி அதை பெருமையாக வரவேற்போம்.
இந்த தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் போராடி வருகிறோம். கடைசி வரை நாங்கள் அனைவரும் அதில் உறுதியாக நிற்போம். இந்த தேர்தலில் எந்த முடிவு வந்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வோம். இந்த கூட்டறிக்கையை வெளியிட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.