நமீதா ஏன் அரசியலுக்கு வந்தார்? : அவரே சொன்ன ரகசியம்
படங்களில் அதிகமாக பார்க்க முடியாவிட்டாலும், பட விழாக்களில் அவ்வப்போது பார்க்க முடிகிறது நமீதாவை!
வந்த வேகத்தில் சம்பாதித்த பணத்தோடு சொந்த மாநிலத்துக்கு சென்று விடும் வட இந்திய நடிகைகளுக்கு மத்தியில், தமிழ்நாடு தான் எனக்கு தாய் வீடு என்று அவ்வப்போது சொல்பவர் ஆளும் கட்சியான அதிமுகவிலும் சில மாதங்களுக்கு முன்பு உறுப்பினராக இணைந்தார்.
அம்மாவின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனாலேயே இந்தக் கட்சியில் சேர்ந்தேன் என்று அப்போது விளக்கம் கொடுத்த நமீதா தான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்பதற்காக உண்மையான காரணத்தை அவரே சாயா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரகசியம் உடைத்தார்.
அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கி தயாரித்துள்ள இப்படம் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம், நன்கொடை குறித்தான விஷயங்களைப் பேசுகிறது.
இப்படத்தின் பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். நடிகைகள் நமீதா, வசுந்தரா, ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் நமீதா பேசும் போது “இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நான் ஏன் அரசியலுக்கு வந்தேன் என்று என்னைப் பார்க்கும் எல்லோரும் என்னிடம் கேட்பார்கள். அந்த ரகசியத்தை நான் இங்கே சொல்கிறேன். சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள் தான் இருக்கின்றன. அதனால் தான் நான் அரசியலில் நுழைந்தேன்.
குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி, அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். ஆம், நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்க தான் குழந்தைகள். நான் தான் பெற்றோர் மாதிரி கவனித்துக் கொள்கிறேன். என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொள்கிறேன்.
ஒரு விஷயம், இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன. நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது, நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும். எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும், அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள், நிறைய பேசுங்கள். இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள்” என்றார் நமீதா.