‘தளபதி 63’ – 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேரும் நயன்தாரா!
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் 63-வது படத்தை அட்லீ இயக்கப் போகிறார்.
‘தளபதி 63’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள்முதலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கப் போகும் நடிகை யார்? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. கீர்த்தி சுரேஷ், சமந்தா, நயன்தாரா என பல முன்னணி நடிகைகளின் பெயர்கள் அடிபட்டது.
இந்நிலையில் நயன்தாரா தான் விஜய் ஜோடியாக இப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுதேவா இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்தார். அதன் பிறகு எந்தப்படத்திலும் விஜய்யுடன் ஜோடி சேராதவர் சுமார் 9 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார்.
நயன்தாரா தவிர இப்படத்தில் இன்னொரு கதாநாயகியும் படத்தில் உண்டு. அந்த நாயகி வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க விளையாட்டை மையப்படுத்தி இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் அட்லீ. இதில் விளையாட்டுப் பயிற்சியாளராக விஜய் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரம் இதுவரை விஜய் நடிக்காத ஒன்று என்பதால், அதற்காக சில பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறாராம் விஜய்.