நயன்தாரா நடித்தது திருட்டுக் கதையா? : ‘டோரா’ டைரக்டர் மீது பரபரப்பு புகார்!

எப்படி அரசு மருத்துவமனைகளில் ‘குழந்தை திருட்டு’ சகஜமாகி விட்டதோ?, அதேபோலத்தான் கோடம்பாக்கத்திலும் ‘கதை திருட்டு’ பஞ்சாயத்துகள் சகஜமாகி விட்டது.
மாதம் ஒருவராவது இப்படி ஒரு புகாரோடு மீடியாக்கள் முன் புலம்புவது வாடிக்கையாகி விட்ட நிலையில், நயன்தாரா நடித்து வரும் ‘டோரா’ படத்தின் கதையும் என்னுடைய கதை என்று புலம்புகிறார் அதை பறிகொடுத்த ‘சேட்டிலைட்’ ஸ்ரீதர் என்பவர்.
எப்.எம்.எஸ் ஏரியாக்களில் படங்களை விற்பனை செய்தும், சேட்டிலைட் சேனல்களுக்கு படங்களை வாங்கிக் கொடுத்தும் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்சினிமாவில் வியாபாரத்துறையில் கொடிகட்டிப் பறந்த இவர் தனது பல வருட சினிமா அனுபவத்தை வைத்து சொந்தமாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்து ஆரம்பித்த படம் தான் ‘அலாவுதீனும் அற்புதக் காரும்.’
மீதி என்ன நடந்தது என்பதை அவரே சொல்கிறார்…
”கடந்த சில வருடங்களாகவே தமிழ்சினிமாவோட சேட்டிலைட் பிசினஸ் சொல்லிக்கிற மாதிரி இல்லை. அதனால ஒரு படம் தயாரிக்கலாம்னு முடிவு பண்ணி வியாபாரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கதை எழுதி அதற்கு ‘அலாவுதீனும் அற்புதக் காரும்’னு டைட்டில் வெச்சு 2013 ல அந்தப் படத்தை ஆரம்பிச்சேன்.
அதுக்காக பெங்களூருக்குப் போய் 5 லட்சம் ரூபாய்ல ஒரு காரை வாங்கி வந்து அதை என்னோட கதைக்கு ஏத்த மாதிரி டிசைன் பண்ணி இப்பக்கூட அதை என் வீட்ல தான் நிறுத்தியிருக்கேன்.
பப்ளிசிட்டியெல்லாம் பண்ணி படத்தை ஆரம்பிக்கிற நேரத்துல நான் எதிர்பார்த்த பைனான்ஸ் கெடைக்காம படம் தாமதமாச்சு.

ஆனாலும் அங்க இங்கத் தேடி இப்பத்தான் ஒரு தயாரிப்பாளரை பேசி வெச்சிருந்தா அவர் ”என்ன ஸ்ரீதர் உங்க கதையில தான் ‘டோரா’ன்னு ஒரு படம் ரெடியாயிக்கிட்டிருக்கு. நயன்தாரா தான் அதுல ஹீரோயின்”னு சொன்னவர் அதே மாதிரி கதைன்னு என்னோட படத்தை தயாரிக்க முடியாதுன்னு சொல்லிட்டார்.
அதுக்கப்புறம் தான் டோரா படத்தோட நியூஸ், ஸ்டில்ஸ், ட்ரெய்லர்னு எல்லாவற்றையும் பார்த்தேன். அது என்னோட கதையாகத்தான் இருக்குமோன்னு எனக்கு உறுதியாகத் தெரிந்தது என்றவர் இயக்குநர் சற்குணம் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. தாஸ் ராமசாமி உட்பட அவரது உதவியாளர்கள் மீது தான் பெருத்த சந்தேகம் இருக்கிறது என்கிறார்.
அப்படி வலுவாகச் சந்தேகப்பட காரணமும் இருக்கிறது. இவர் வீட்டுக்கு அருகில் தான் சில காலம் சற்குணமும் குடியிருந்தாராம். அப்போது அவரைத் தேடி அவரது உதவியாளர்கள் வருவார்களாம். அதேபோல இந்தப் படத்தோட டிஸ்கஷனுக்காக பொள்ளாச்சிக்கு போயிருந்தப்ப தான் ”நையாண்டி” படத்தோட ஷூட்டிங் நடந்தது. அங்க நான் இருந்த அறைக்கு பக்கத்துல தான் அந்தப் படத்தோட டீம் தங்கியிருந்தாங்க. அதே மாதிரி என் படத்தோட கதையை நெறைய சினிமாக்காரர்கள்கிட்ட சொல்லியிருக்கேன். இந்த வழிகள்ல ஏதோ ஒரு வழியில தான் என்னோட கதை களவாடப்பட்டிருக்கிறது என்கிறார் ஸ்ரீதர்.
இந்தப் படத்துக்காக என்னோட சொந்த வீடு, என்கிட்ட இருந்த கார் எல்லாவற்றையும் விற்று விட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்து என் மனைவியும் என்னை விவாகரத்து செய்து விட்டுப் போய் விட்டார். சினிமாவுக்காகத் தான் எல்லாவற்றையும் இழந்தேன். இப்போ நான் எழுதிய கதையையும் எப்படி இழக்க முடியும்? என்று கண்ணீரோடு புலம்பும் ‘சேட்டிலைட்’ ஸ்ரீதர் நான் ‘டோரா’ தயாரிப்பாளரையே, இயக்குநர் சற்குணத்தையோ எந்த வகையிலும் தொந்தரவு செய்ய விரும்பாததால் இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் என்னுடைய கதைக்கு தயாரிப்பாளர் கிடைக்காததால் பொருளாதார ரீதியாக நான் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அதனால் களவாடப்பட்ட என் கதைக்கு உரிய நிவாரணத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நீதிமன்றம் சென்று எனக்கான நியாயத்தை பெறுவேன்” என்கிறார்.
இவரின் இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தப்பட்டவர்கள் என்ன பதிலை வைத்திருக்கிறார்கள்? பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.