பெரிய குடும்பமாக இருந்தாலும் சாதாரண மனிதராக இருக்கிறார்..! – உதயநிதியைப் பார்த்து வியந்த நாயகி

மூன்ஷாட் எண்டர்டெயின்மெண்ட் சந்தோஷ் டி.குருவில்லா தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், நமீதா பிரமோத், பார்வதி நாயர், சமுத்திரகனி, இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கும் படம் ”நிமிர்”.
பிரியதர்ஷன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு டர்புகா சிவா, அஜனீஷ் லோக்நாத் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். ஜனவரி 26ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜனவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட நாயகிகளில் ஒருவரான பார்வதி நாயர் உதயநிதியின் எளிமையைப் பற்றி வியந்து பேசினார்…
”பிரியதர்ஷன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர். அவர் படத்தில் 2 நொடிகள் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் நடித்திருப்பேன். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து வந்தும் இவ்வளவு சாதாரண மனிதராக இருக்கிறார் உதயநிதி. இந்த படத்தில் நான் தான் ஜூனியர், எல்லோருமே என்னை விட பெரிய சாதனையாளர்கள் என்றார் பார்வதி.
படப்பிடிப்புக்கு போகும்போது எங்களிடம் பாடல்களே இல்லை. பிரியதர்ஷன் சார் சொன்னதை அப்படியே செய்தேன். மகேந்திரன் சார் நான் நடித்த படங்களை பார்த்திருக்கிறேன் என்று சொன்னதும், நிமிர் படத்தில் அவருடன் இணைந்து நடித்ததும் எனக்கு பெருமை.
தெறி படத்துக்கு பிறகு பல படங்களில் நடிக்க அழைத்தும் மறுத்து விட்ட மகேந்திரன் சார், பிரியதர்ஷன் படத்தில் நடித்தே தீருவேன் என நடிக்க வந்தார். சமுத்திரகனி சாருடன் 3 நாட்கள் ரொம்ப கஷ்டப்பட்டு புரண்டு சண்டை போட்டது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் யாரையெல்லாம் நடிக்க வைக்கலாம் என பிரியதர்ஷன் சாருக்கு உதவியாக இருந்தார் சமுத்திரகனி. அவரே வசனமும் எழுதியிருக்கிறார். நான் நடித்த படங்கள் எதையும் பிரியதர்ஷன் சார் பார்த்ததில்லை. ஒரு நாள் திடீரென என்னை அழைத்து நீ தான் நடிக்கிற என்றார். எனக்கே கொஞ்சம் ஷாக். படம் முடிந்த பிறகு முதல் காட்சி பார்த்து விட்டு, அடுத்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் இருந்தா கூட கூப்பிடுங்க, நடிக்க வரேன்னு அவரிடம் சொன்னேன் என்றார் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.
இந்த படத்துக்கு 10 நடிகர்கள் பெயரை பிரியதர்ஷன் சாரிடம் பரிந்துரைத்தேன். அவர்கள் எல்லோரையும் அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார். ஒரு நாள் அவரே உதயநிதி எப்படி இருப்பார் என்று கேட்டார். அத்தோடு நானும் படத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னார். வசனமும் என்னை எழுத சொன்னார். ஆனால் வசனம் நான் எழுதவில்லை. அவர் தான் உண்மையில் எழுதியிருக்கிறார். பெருந்தன்மையாக என் பெயரை போட்டிருக்கிறார்.
பாலச்சந்தர் மறைவிற்கு பிறகு இன்னொரு குருநாதர் எனக்கு கிடைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் ராஜசேகர் மாஸ்டர் என்னையும், உதயநிதியையும் ரொம்பவே கஷ்டப்படுத்தி விட்டார் என்றார் சமுத்திரகனி.
இது தமிழில் என்னுடைய 7வது படம். 36 நாட்களில் படத்தை ஒரே கட்டமாக முடித்து விட்டோம், படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார் இயக்குனர் பிரியதர்ஷன்.
விழாவில் ரெட் ஜெயண்ட் அர்ஜூன் துரை, நடிகர்கள் கருணாகரன், எம் எஸ் பாஸ்கர், நாயகி நமீதா பிரமோத், சண்டைப்பயிற்சியாளர் ராஜசேகர், சோனி மியூசிக் அசோக் பர்வாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.