மீண்டும் ‘இளையராஜா 1000’ இசை நிகழ்ச்சி : ஓரங்கட்டப்பட்ட விஜய் டிவி
சின்னத்திரையில் புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து தனி முத்திரை பதித்து வந்த விஜய் டிவி சமீபகாலமாக அதே நிகழ்ச்சிகளால் ரசிகர்களிடையே சவுக்கடி வாங்க ஆரம்பித்திருக்கிறது.
ஏற்கனவே ”விஜய் அவார்ட்ஸ்” நிகழ்ச்சியில் முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே விருது கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்று அந்த சேனல் மீது குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்ற நிலையில், சில வாரங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்த சாதனையை பாராட்டும் விதமாக சென்னையில் விஜய் டிவி சார்பில் நடைபெற்ற ”இளையராஜா 1000” இசை நிகழ்ச்சியுடன் கூடிய பாராட்டு விழா கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
நிகழ்ச்சி தொகுப்பாளர்களே அதிக நேரம் எடுத்துக் கொண்டு பேசியதால் இசைஞானியின் பாடல்கள் மேடையில் குறைவாகத்தான் பாடும் சூழல் ஏற்பட்டது.
இதனால் அதிக கட்டணம் கொடுத்து அந்த நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாந்து போனதாக பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் டிவிக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார்களாம்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டும் விதமாக மே முதல் வாரத்தில் மீண்டும் ”இளையராஜா 1000” இசை நிகழ்ச்சி ஒன்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை விஜய் டிவிக்குத்தான் போகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் இப்போது ”சூரியன் டிவி”யிடம் அந்த உரிமை கொடுக்கப்பட இருக்கிறதாம்.
விஜய் டிவி நடத்திய ”இளையராஜா 1000” இசை நிகழ்ச்சி படு சொதப்பலில் முடிந்ததால் சங்கத்துக்கு நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சியில் அந்த சொதப்பல் எதுவும் நடந்து விடக்கூடாது என்கிற எண்ணத்தில் தயாரிப்பாளர் சங்கம் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
புதிய படங்களையும், சிறு பட்ஜெட் படங்களையும் வாங்குவதில்லை என்று தயாரிப்பாளர் சங்கம் விஜய் டிவி மீது கடுப்பில் இருந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட இந்த அதிரடி முடிவு விஜய் டிவிக்கு பெரும் பின்னடைவாகவே சேனல் உலகில் பார்க்கப்படுகிறது.