‘விசாரணை’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள்! : தனுஷுக்கு மூன்று மடங்கு மகிழ்ச்சி
63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மார்ச் 28-ம் தேதி (திங்கட்கிழமை) தலைநகர் டில்லியில் அறிவிக்கப்பட்டன.
இந்த விருது விழாவில் பிராந்திய மொழிகள் பிரிவில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை இயக்குநர் வெற்றிமாறனின் ‘விசாரணை’ படம் வென்றுள்ளது.
மு.சந்திரகுமார் எழுதிய ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதேபோல ‘விசாரணை’ படத்தின் எடிட்டர் மறைந்த திரு. கிஷோருக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது கிடைத்திருக்கிறது. படத்தில் சிறந்த துணை நடிகருக்கான விருது சமுத்திரக்கனிக்கு கிடைத்திருக்கிறது.
இந்த விருது தகவல் தன்னை எட்டியதும் தான் தயாரித்த ”விசாரணை” படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்திருப்பது 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயம் என்று நடிகர் தனுஷ் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது :
”சில படைப்புகளை துவங்கும் போது நமக்கே தெரியும், இப்படைப்பு மிக முக்கிய இடத்தை பெறும் என்பது.
அதை போன்ற ஒரு படைப்பு தான் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற “விசாரணை”.
நான் “விசாரணை” திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்றுள்ள சமுத்திரக்கனி மற்றும் படத்தொகுப்பாளர் கிஷோருக்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
”விசாரணை” படத்துக்கு 3 விருதுகள் என்பது எனக்கு 3 மடங்கு மகிழ்ச்சியான விஷயமாகும். மூன்று தேசிய விருதுகளை தந்துள்ள இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி கூறுவது எனது கடமையாகும்.
இதை போன்ற படைப்புகளை தமிழ் மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற விஷயம் எனக்கு மகிழ்ச்சியையும், மேலும் இதை போன்ற படைப்பை வழங்க உற்சாகத்தையும் தருகின்றது” என்று கூறியிருக்கிறார் தனுஷ்.