இளையராஜா மீது கோபமா? – பதறிப்போன டைரக்டர்

Get real time updates directly on you device, subscribe now.

யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கி வரும் படம் ‘மாமனிதன்’. இப்படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் இளையராஜாவுக்கும், இயக்குனர் சீனு ராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்று கடந்த சில தினங்களாக ‘மொட்டை அறிக்கை’ உள்ளிட்ட செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு தன் தரப்பில் விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி. அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

நான் கதை,திரைக்கதை வசனமெழுதி இயக்கிய ‘மாமனிதன்’ படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களும் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா அவர்களிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்துச் சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.

“திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்” என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவு தான்.

1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இசைஞானியை இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களை கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.

Related Posts
1 of 154

படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கு கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்” என்றேன் யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன்.

ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் நான்காவது படம். இசைஞானியுடன் பணிபுரியும் முதல் படம் . மாமனிதன் எனக்கு 7வது படம்.

இளையராஜா அவர்கள் மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராக படம் பிடித்திருக்கிறேன். இளையராஜா அவர்களின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜா அவர்களை சிறுமைப் படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்கு சிபாரிசு செய்யவில்லை. என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது பொய்.

நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம். தர்மதுரையில் வைரமுத்து பாடல் வரிகளுக்கு தேசிய விருது கிடைத்தது. இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமென கருதுகிறேன்.

இவ்வாறு சீனு ராமசாமி தெரிவித்திருக்கிறார்.