‘காதலாவது கத்தரிக்காயாவது…’! : ஆரவ்வை தூக்கி எறிந்தார் ஓவியா

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஓவியா.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லட்சக்கணக்கான ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி விட்டவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது சக போட்டியாளரான ஆரவ்வை நிஜமாக காதலிப்பதாகச் சொல்லி அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தார்.
ஆனால் ஆரவ்வோ ஓவியாவின் காதலை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
வெளியே வந்தவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த போது தனக்கு வெளியே இருந்த ஆதரவைப் பற்றி கேள்விப்பட்டு நெகிழ்ந்து போய் விட்டார். அதோடு அடுத்த நாள் சென்னையிலுள்ள ஒரு மாலுக்கு சென்றவர் அங்கு ரசிகர்கள் முன்னிலையில் நான் ஆரவ்வை காதலிக்கிறேன் என்றும், அவருக்காக காத்திருப்பேன் என்றும், என் காதல் உண்மையானது என்று அறிவித்தார். பின்னர் ஒருவாரம் கழித்து தனக்கு ஆதரவு தந்த ரசிகர்கள் அத்தனை பேருக்கும் ஒரு வீடியோ மூலமாக நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் ஆரவ் உடனான காதல் சமாச்சாரத்தில் ஓவியா எடுத்திருக்கும் புதிய முடிவு அவருடைய ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது.
”நான் யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோஷமாக உள்ளேன்” இது தான் என்னுடைய தற்போதையை உறவு நிலை என்று கூறியிருக்கிறார் ஓவியா.
ஆரவ் மீது காதலும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை என்று சொல்லும் விதமாக ஓவியா வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர். காரணம் தொடக்க நாள் முதலே ஓவியா ஆரவ்வை காதலிப்பதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.
ஓவியாவின் இந்த முடிவை வரவேற்றுள்ள நடிகர் கதிரும் ”மாஸ் செக்டாருக்குள்” ஓவியா நுழைந்துள்ளதாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.