நடிகர் சங்கத் தேர்தல் : வெற்றி வாகை சூடியது விஷால் அணி!

Get real time updates directly on you device, subscribe now.

vishal VICTORY

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான ‘பாண்டவர் அணி’ அமோக வெற்றியைப் பெற்றது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று 18-ம் தேதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த காலையிலேயே வந்து தனது வாக்கை செலுத்தினார்.

அதோடு அங்குள்ள செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் நடிகர் சங்கத்தின் பெயரை ‘தமிழ்நாடு நடிகர் சங்கம்’ என்றும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதோடு தேர்தலில் வெற்றி பெற்று வருபவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் அவர்கள் ராஜினாமா செய்து விட வேண்டும் என்றார்.

நடிகர் கமல் வாக்களித்த பிறகு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை ‘இந்திய நடிகர் சங்கம்’ என்று மாற்ற வேண்டும் என்றார்.

பின்னர் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து கொண்டிருக்கும் போதே பிற்பகல் 2 மணிவாக்கில் இரு அணியினருக்கும் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் சமரசம் செய்ததையடுத்து தேர்தல் அமைதியாக நடந்தது.

நடிகர்கள் விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம்ரவி, ஆர்யா என பல இளம் முன்னணி நடிகர்களும் தேர்தலில் வாக்களித்தனர். 5 மணி வரை நடிகர் அஜித் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வரவில்லை. படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் அவர் ஓய்வு எடுத்து வருகிறார். அதன் காரணமாக அஜித் வரவில்லை என்று சொல்லப்பட்டது. பின்னர் அவர் தனது வாக்கை தபாலில் செலுத்தி விட்டார் என்று தகவல் தரப்பட்டது.

மொத்தம் உள்ள 3,139 வாக்குகளில் 2,607 ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடியவும் ஓட்டு எண்ணிக்கை மாலை 5:30 மணிக்கு ஆரம்பமானது.

முதலில் தபால் ஓட்டுகளை என்னும் பணி ஆரம்பமானது. அதில் விஷால் அணியை விட சரத்குமார் அணி முன்னணியில் இருந்தது. பின்னர் நேரடி ஓட்டுகளை என்னும் பணி ஆரம்பமானது காட்சிகள் மாறத்தொடங்கியது.

அதில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியை எதிர்த்து போட்டியிட்ட விஷால் முன்னணியில் இருந்தார். பின்னர் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி அவரை எதிர்த்து போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணனை விட அதிக ஓட்டுகள் வாங்கி முன்னணியில் இருந்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசரை விட சரத்குமார் அதிக எண்ணிக்கையில் முன்னணியில் இருந்தார். சிறிது நேரத்தில் அது மாறிப்போனது. சரத்குமாரை விட நாசர் முன்னணியில் வர ஆரம்பித்தார்.

vi-vshal

மீதி இருந்த துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர்கள் கருணாஸ், பொன்வண்ணன் இருவரும் நீண்ட நேரம் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட விஜயகுமார், சிம்பு ஆகியோரை விடவும் வாக்கு எண்ணிக்கையில் பின் தங்கியிருந்தனர்.

இறுதியில் அவர்களும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல செயற்குழு உறுப்பினர்கள் பதவியில் விஷாலின் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 பேர்கள் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அதற்கான சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் விஷால் ஆதரவு அணியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

பின்னர் பேசிய நடிகர் நாசர், யாரையும் புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் நடத்தப்படவில்லை. ஒரு மாற்றம் தேவை அவ்வளவு தான். மூத்தக் கலைஞர்களும், இளைஞர்களும் ஒன்று கூடி நடிகர் சங்கத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்வோம்.

மிக முக்கியமாக ரஜினி, கமல், ஆர்யா, விஜய் சேதுபதி, ஏன் சக்கர நாற்கலியில் கூட பலர் வந்தனர். தேர்தல் இதுவரை இல்லாத அளவிற்கு வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது. முதலில் இந்த மாபெரும் திரு விழாவில் கலந்து கொண்ட எல்லா அங்கத்தினருக்கும் நன்றி. இளைய தலைமுறைக்கும் நன்றி. வெறும் ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். அப்படி இருக்கையில் இது மிகப்பெரிய வெற்றி.

Related Posts
1 of 93

நாங்கள் ஒன்றாக இருப்போம். நானும் சரத்குமாரும் இந்த தேர்தல் முடிந்தவுடன் ஆரத் தழுவி கட்டியணைத்து பரஸ்பரம் எங்கள் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தோம். இதுகுறித்து முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு கண்டிப்பாக நிகழும். நான் தலைவராக இருந்தாலும் ஒரு போர்வாளாக செயல்படுவேன். கண்டிப்பாக குடும்பமாக செயல்படுவோம். இந்தத் மகிழ்ச்சியான தருணத்தை அனுபவிக்க நினைக்கிறோம். எனக்கூறினார்.

விஷால் பேசுகையில்: நல்ல விஷயம் நடந்துள்ளது. எத்தனையோ சங்கங்கள் இருக்கு. சக நடிகர்களுக்கு நல்லது செய்யணும்னு துவங்கியிருக்கோம். முக்கியமாக இந்த நேரத்தில் முதல்வர் அம்மாவுக்கும், காவல்துறைக்கும் எனது மிகப்பெரிய நன்றிகள். என் நண்பன் ரித்தீஷ்க்கு என்னோட மிகப்பெரிய நன்றி. ஒரு கலை நிகழ்ச்சியை விட சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி. சக்கர நாற்காலியில், நடக்க முடியாமல், கண் பார்வையில்லாமல் நான் பார்த்ததுக் கூட இல்லை இப்படியெல்லாம் அவர்கள் எல்லாம் வந்து வாக்களித்தார்கள். நன்றி

பொருளாளர் கார்த்தி பேசுகையில், சங்கத்துக்கு ஒரு புத்துணர்ச்சி கிடைத்துள்ளது. எங்கள் மேல் நம்பிக்கை வைத்து வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி. முதற்கட்டமாக சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் பட்டியல் சரிசெய்யப்பட்டு, அவர்களின் தேவைகள் குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். இந்த வெற்றிக்கு பெரும் பங்கு வகித்த ஊடகங்களுக்கும் நன்றி என்றார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் வெற்றி

நாசர்: 1344

சரத்குமார்: 1231

பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி

விஷால்: 1445

ராதாரவி:1138

பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி வெற்றி பெற்றுள்ளார்

கார்த்தி – 1493

எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் -1080

துணைத்தலைவர் 1 பதவிக்கு போட்டியிட்ட பொன்வண்ணன் வெற்றி பெற்றுள்ளார்

பொன்வண்ணன் – 1235

சிம்பு – 1115

துணைத்தலைவர் 2 பதவியில் கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

கருணாஸ் – 1362

விஜயகுமார் – 1107

இதுதவிர செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான போட்டியில் விஷாலின் பாண்டவர் அணியைச் சேர்ந்த 20 வேற்பாளர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.