சமுத்திரக்கனிக்கு அம்பேத்கர் பெயர்! – இயக்குனர் பா.ரஞ்சித் மகிழ்ச்சி
ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் ‘பற’.
இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதாவது,
“இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார்.
இந்தப் ‘பற’ படத்தில் பிசி ஆக்ட் பற்றி ட்ரைலரில் சொல்லி இருக்கிறார். அது இன்றைய சமகாலப் பிரச்சனை. சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெற வேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது.
சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது” என்றார்.