தனுஷூக்காக ஹாலிவுட்டே காத்துக்கிட்டிருக்கு! : பார்த்திபன் பெருமிதம்
இன்று காலை பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தொடரி’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சென்னை சத்யம் தியேட்டரில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தமிழ்சினிமாவின் பல முன்னணி பிரபலங்களும் ஆஜராகியிருந்த விழாவில் மேடையில் ஏறிய ஒவ்வொரு பிரபலமும் தனுஷை பாராட்டி தள்ளி விட்டார்கள்.
எப்போதுமே தனது பேச்சில் புதுமை கலந்து பேசும் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் பேசும் போது நட்புக்கும், தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் தனுஷைப் பற்றி சிலாகித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது :
இந்த ‘தொடரி’ படத்தைப் பற்றி ரொம்ப சுருக்கமா சொல்லணும்மா ரயில் மேல ஒரு மயிலு; அந்த மயில காதலிக்கிற ஒரு புயலுன்னு சொல்லலாம்.
என்னோட ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் வந்து ரெண்டு வருஷம் ஆச்சு. என்னைப்பத்தி யார் அக்கறைப்பட்டாங்க, யார் கவலைப்பட்டாங்கன்னு தெரியாது. ஆனா பிரபுசாலமன் வந்து அடிக்கடி என்னோட அடுத்த படத்தைப் பத்தி அக்கறையோட விசாரிப்பார்.
சக கலைஞன் மீதான அந்த அக்கறைக்கு நான் தலை வணங்குறேன். நம்மளை உயிரா சுமந்தவங்களை தாய்ன்னு சொல்றப்போ நம்மளை நெஞ்சில சுமக்கிறவங்களை நாம என்ன சொல்றது? அந்த தாயன்போட நான் அவரை வாழ்த்துகிறேன்.
எல்லாரும் ‘தொடரி’ படத்தோட ட்ரெய்லரை பார்த்துட்டு இது ஒரு ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொன்னாங்க. நாம வந்து ஒரு தமிழ்ப்படத்தை ஹாலிவுட் படமா பார்க்கணும்னு அவசியமே இல்லை. கூடிய சீக்கிரமே தனுஷ் நடிப்புல ஒரு ஹாலிவுட் படமே வரப்போகுதுங்கிறது பெருமையான விஷயம்.
”எப்ப சார் அந்த ஹாலிவுட் படம் வரும்னு?” தனுஷ்கிட்ட கேட்டேன். அதுக்கு தனுஷ் ”அவங்க ஜூன்ல தான் ஷூட்டிங் வெச்சிருந்தாங்க. இல்லல்ல… எனக்கு வெற்றிமாறன் படம் தான் முக்கியம். இந்தப் படத்தை முடிச்சிட்டு ஜனவரியில வேணும்னா நான் வர்றேன். அதாவது ஹாலிவுட் கம்பெனிக்கே முடிஞ்சா என்னை வெச்சு ஜனவரியில எடுத்துக்கங்க. எனக்கு வெற்றிமாறன் படம் தான் முக்கியம்னு சொல்றாரு”. அந்தளவுக்கு ஒரு தமிழ் உணர்வோட இங்க நமக்கு வெற்றியைக் கொடுத்தவங்க படங்களை முடிச்சுட்டு மத்த மொழிக்கு போகலாம்னு நெனைக்கிறாரு.
அப்படிப்பட்ட ஹாலிவுட் தனுஷுக்கு காத்துக்கிட்டுருக்கு. அந்தளவுக்கு ஹாலிவுட்டே காத்துக்கிட்டிருக்கிற அளவுக்கு தமிழனோட பெருமையை நிலை நாட்டப்போற தனுஷூக்கு என்னுடைய வாழ்த்துகள் என்றார்.