கமல் – ரஜினி ரெண்டு பேரும் அரசியலுக்கு வரட்டுமே? : அறிக்கை விட்டு சமாளித்த பார்த்திபன்

Get real time updates directly on you device, subscribe now.

parthipan

சிரித்துக் கொண்டே சொல்ல வேண்டிய விஷயத்தை எந்த மேடையாக இருந்தாலும் தனக்கே உரிய நக்கல் பாணியில் சொல்லி விடுவார் நடிகர் பார்த்திபன்.

அந்த நக்கல் தான் பார்த்திபனின் அதிகப்பட்ச துணிச்சலும் கூட… அப்படித்தான் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசம் குறித்தும் பொதுவாக எம்மனசு தங்கம் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசியவர் ”ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவனைத்தான் கேட்கணும்” என்று ரஜினியை கலாய்ப்பது போல பதில் சொல்லியிருந்தார்.

அப்புறமென்ன? நீங்களுமா பார்த்திபன் என்று ரஜினி ரசிகர்களின் கோப முகத்துக்கு இடம் கொடுத்தது போல ஆகி விட்டது. அதோடு விஷயம் முடியவில்லை. என்ன நடந்ததோ? அல்லது என்ன நடந்திருக்குமோ? இன்றைக்கு எல்லா ஊடகங்களுக்கும் அதுகுறித்து அறிக்கை ஒன்றை அனுப்பி விட்டார்.

இதோ அந்த ‘அடிபணிந்த’ அறிக்கை :

Related Posts
1 of 85

அதில், கமல்+ரஜனி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு மிக நெருக்கமான நண்பர்! என் வளர்ச்சியில் அக்கறை காட்டியவர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் “பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்” எனத்தூண்டியவர். Ktvi பார்த்து மெச்சியவர். அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரனத்திற்கு “எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்” என்ற என் அக(ழ்வு) ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்க மாட்டார். நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களை புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).

இதே கேள்விகளுக்கு, இதே பதில்களை, இதே சிரிப்புடன், போன மாதமும் சொன்னேன் சிறு சலசலப்புமில்லை. ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஒரு அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன். இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும். ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை.

பொது வாழ்வில் விமர்சனங்களை எதிர் கொள்ள இன்னும் தொண்டரகளாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும், பலர் ரஜனி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் “நீங்களுமா?” என அதிர்ந்திருக்கிறார்கள். அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்!, என்று தெரிவித்துள்ளார்.

படங்களுக்கு அரசின் வரிச்சலுகை பெற லஞ்சம் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று கமல் சொன்ன போது, அதை ஆதரித்து துணிச்சலோடு கருத்து சொன்ன முதல் ஆள் பார்த்திபன் தான். அப்படிப்பட்டவர் ஒரு சாதாரண கமெண்ட்டுக்கு இவ்வளவு தூரம் இறங்கி வந்து மறுப்பறிக்கை தர வேண்டுமா என்பது தான் நடுநிலைவாதிகளின் கேள்வி?