இளம் பெண்களின் பாதுகாப்பைப் பேசும் ஜே.டி.சக்கரவர்த்தியின் ‘பட்டறை’
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஜேடி.சக்கரவர்த்தி. இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் ‘பட்டறை’.
ஜே.டி.ஜெர்ரி, கே.வி.ஆனந்த் ஆகியோர்களிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய பீட்டர் ஆல்வின் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார்.
ரேணுகா, டிக்சானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கியமான சில கதாபாத்திரங்களில் திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
படத்தைப் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது, ”நம் நாட்டில் போதை பொருட்கள் கடத்தலை தடுப்பதில் தீவிரம் காட்டுவது போல பெண் கடத்தல்களை தடுக்க அரசு அக்கறை காட்டுவதில்லை.
சென்னையில் கடத்தப்படுகிற ஒரு பெண் எப்படி மும்பைக்கு கொண்டு செல்லப்படுகிறாள்? என்று யோசித்துப் பார்த்தால் நெட்வொர்க் இல்லாமல் அது சாத்தியமில்லை. அப்படிப்பட்ட கடத்தல்களையும், அதன் பின்னணியில் இருப்பவர்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான் இந்தப்படம்.
இந்தப் படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை முடிவு செய்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.
வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி நாம் சொல்லிக் கொடுப்பதில்லை. வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தையும் இந்தப்படம் சொல்லும்” என்றார்.