முன்னணி நடிகர்களின் நட்பு சினிமாவை செழிக்க வைக்கும்! : தயாரிப்பாளர் நம்பிக்கை
விக்ராந்த் நாயகனாக நடிக்க அவரது அண்ணன் புதுமுக இயக்குநர் சஞ்சீவ் இயக்கியுள்ள படம் ‘தாக்க தாக்க’.
ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப்படத்தைக் கலைப்புலி இண்டர்நேஷனல் உலகெங்கும் வெளியிடுகிறது.
இப்படத்தின் ஆடியோ பங்ஷன் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் செல்வராகவன் பாடல்களை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.
விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது
“நேரமே கிடைக்காத என் சூழலிலும் ஒருநாள் இரவில் ‘தாக்க தாக்க’ படத்தைப் பார்த்தேன்.
இதை ஒரு கமர்ஷியல் கவிதையாக எடுத்து இருக்கிறார்கள். இயக்குநருக்கு நல்ல இயக்குநராகும் எல்லாத் தகுதிகளும் உள்ளன.அதற்கு கட்டியம் கூறுகிற மாதிரி இப்படம் இருக்கும் .எதிர் காலத்தில் .இவர் எங்கள் நிறுவனத்தில் படம் இயக்குவார்.
விக்ராந்த்திடம் வைரம் பாய்ந்த திறமை இருக்கிறது அது அவரது முகத்தில் தெரிகிறது. அவரிடம் உள்ள தீட்சண்யம் மூலம் திறமை வெளிப்படும்.அவருக்கு ஒரு நல்ல வருங்காலம் வரும் . விக்ராந்தின் நண்பர்கள் விஷால், ஆர்யா, விஷ்ணு மூவரும் நடித்து உதவியிருப்பது எதிர்காலத்தில் உள்ள நடிகர்களுக்கு நட்புக்கு அடையாளமாக இருக்கிறது. இது எதிர்கால சினிமாவை செழிக்க வழிவகுக்கும். அதற்கு இது ஓர் அடையாளம் என்று கூறுவேன்” இவ்வாறு அவர் பேசினார்.