புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

purampokku-review-kv

மிழ்சினிமாவை ‘அடுத்த கட்டத்துக்கு..’ என்கிற வாய் சவடாலோடு நின்று விடும் இயக்குனர்களுக்கு மத்தியில் அதை செயலாக்கிய விதத்தில் பெருமைக்குரிய இயக்குனராகியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்!

அவருடைய ‘இயற்கை’ படத்தில் ஆரம்பித்து ‘பேராண்மை’ வரை இயக்கிய மூன்று படங்களிலும் மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய விஷயங்களை துணிச்சலாக ரசிகர்களிடையே எடுத்துச் சொன்னவர்.

அந்த துணிச்சல் இம்மியளவும் குறையாமல் அதே வேகத்தோடு ரிலீசாகி இதுதான் மக்களுக்கான படம். இப்படிப்பட்ட படைப்புகள் தான் இப்போதிருக்கும் ரசிகர்களுக்கு தேவை என்பதையும் உணர்த்தியிருக்கும் படம் தான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை.’

அடுத்தடுத்து மூன்று தேச விரோத செயல்களில் ஈடுபட்டு தேசத்துரோகியா சித்தரிக்கப்படும் பாலு உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி மரண தண்டனை கைதியாகிறார்.

சென்னை மத்திய சிறையில் இருக்கும் அவரை மீட்க அவர் சார்ந்த கம்ப்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு குழு அங்கிருந்து தப்பிக்க வைக்க முயற்சிக்கிறது.

தேசத்துரோகி பாலுவை தூக்கில் போட வேண்டுமென்றால் அதற்கு அந்த வேலையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள ஒரு துடிப்பான ஆள் தேவைப்படுகிறார். அப்படி ஒரு ஆளை சிறைத்துறை அதிகாரி மெக்காலே தேடும்போது பரம்பரை பரம்பரையாக மரண தண்டனை கைதிகளை தூக்கில் போடும் பரம்பரையில் வந்த எமலிங்கம் என்கிற இளைஞர் இருப்பதை அறிகிறார்.

அவரிடம் இதுகுறித்து பேசும்போது ஸாரி… சார் என்னால கொலை செய்ய முடியாது. என்று கதறி அழுது அந்த வேலையை செய்ய மறுக்கிறார்.

ஆனால் அதிகாரி மெக்காலாவோ இதை உங்கள் மகன் செய்துதான் ஆக வேண்டும் என்று எம லிங்கத்தின் அம்மாவிடம் கண்டிஷனாக சொல்கிறார்.

இதற்கிடையே பாலுவை சிறையிலிருந்து தப்பிக்க வைக்க திட்டமிடும் கூட்டம் அப்படியே அவரை தூக்கில் போட வரும் எம லிங்கத்தையும் கொலை செய்ய பின் தொடர்கிறார்கள்.

தூக்கில் போடும் வேலையே வேண்டாம் என்கிற எண்ணத்தில் இருக்கும் எம லிங்கத்தை தங்களில் ஒருவராக மாற்றி எப்படியாவது பாலுவை அவரின் துணையோடு சிறையில் இருந்து தப்பிக்க வைக்க முயற்சிக்கிறார்கள்.

தூக்குத் தண்டனைக் கைதி, சட்டத்தின் படி அவரைத் தூக்கிலிட்டே ஆக வேண்டுமென்று துடிக்கும் சிறைத்துறை அதிகாரி, தூக்கில் போடும் ஊழியர் என்ற மூவரைச் சுற்றி பின்னணப்பட்ட ஒரு விறுவிறுப்பான நல்ல அர்த்தமுள்ள படமாக மக்களின் பார்வைக்கு வந்திருக்கும் படம் தான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை.’

பாலுவாக ஆர்யா, எம லிங்கமாக விஜய்சேதுபதி, சிறைத்துறை அதிகாரியாக ஷாம் என்று மூன்று முன்னணி இளம் ஹீரோக்களைச் சுற்றித்தான் படம் நகர்கிறது. மூன்று பேர்களுக்கும் சரிசமமாக காட்சியமைப்புகளை வைத்து மூன்று கேரக்டர்களையுமே மணிக்கணக்கில் சிலாகித்து பேச வைத்திருக்கும் பெருமை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனையே சேரும்.

சிறைச்சாலை எப்படிப்பட்டது. அங்கு நடப்பது என்னென்ன? அங்குள்ள கைதிகளின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? இதுபோன்ற சிறையின் அறிந்திராத பல திடுக்கிடும் விஷயங்களை மிக நேர்த்தியாக படமாக்கி பந்தி வைத்திருக்கிறார்கள்.

Related Posts
1 of 7

ஆர்யா என்றாலே கோடம்பாக்கத்தில் ஒரு ரொமான்ஸ் ஹீரோவாகத்தான் பார்க்கப்படுகிறார். ஆனால் இப்படத்தில் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவராக மக்களின் பக்கம் நின்று பேசும் ஒரு மகத்தான போராளியாக வருகிறார். எந்தவித மிகைப்படுத்தலும் இல்லாத அவருடைய நடிப்புக்கு அடுத்த கட்டம் இந்தப்படம் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

எந்த விஷயமாக இருந்தாலும் அதிராமல், அமைதியாக இருந்து அதே சமயம் உண்மையின் பக்கமிருந்து அவர் பேசும் வசனங்கள், அவர் சார்ந்த காட்சியமைப்புகள் எல்லாமே கைதட்டல் ரகம் தான்.

‘6’ மெழுகுவர்த்திகள் என்றொரு படம் ரிலீசாகும் வரை ஷாம் என்கிற திறமைசாலியின் நடிப்பை இந்த உலகம் அறிந்திருக்கவில்லை. அந்தப் படத்துக்குப் பிறகு என்னாலும் கேரக்டருக்காக வாழ முடியும் என்று நிரூபித்தவர் இப்படத்தில் சிறைத்துறை அதிகாரி மெக்காலேவாக பின்னி பெடலெடுத்து விட்டார்.

ஒரு பக்கம் உயர் அதிகாரிகளின் உத்தரவு, இன்னொரு பக்கம் கைதிகளுக்கான சுதந்திரம், அவர்களுக்கான தேவைகள், வசதிகள் என ஒரு நேர்மையான, அதே சமயத்தில் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவராக ஒரு போல்ட்டான கேரக்டரில் நடித்திருக்கிறார். இப்படி ஒரு நடிகரின் திறைமைக்கு சரியான படங்களை தராதது இயக்குனர்களின் கவனக்குறைவு என்று தான் சொல்ல வேண்டுமே தவிர ஷாமை துளியளவும் குறை சொல்ல முடியாது.

கம்ப்யூனிஷ சிந்தாந்தங்களை அதிகம் புகுத்தாமல் ”மக்களுக்காக போராடுகிறேன்னு சொன்ன..? ஆனால் அவங்களே உன்னை தூக்குல போடச்சொல்லி போராட்டம் செய்றாங்களே..? என மெக்காலே (ஷாம்) கேட்க அதற்கு பாலு (ஆர்யா) நான் சொல்ற ஜனங்க இவங்க இல்ல சார்” என்று பதில் சொல்லி மக்களுக்காகத்தான் அரசே தவிர அரசுக்காக மக்கள் அல்ல… என்பதை உணர்த்தும் உண்மையான வீரியமுள்ள வசனங்கள் படம் முழுக்க உண்டு.

பல காட்சிகளில் ஆர்யா – ஷாம் செய்யும் வாதங்கள் அர்த்தமுள்ள விவாதமாகத்தான் இருக்கிறது. என்னதான் ஆர்யா குற்றவாளியாக இருந்தாலும் அவர் சொல்லும் நிஜங்களையும், உண்மைகளையும் சிறைத்துறை அதிகாரி ஷாம் ஏற்றுக்கொள்வது சபாஷ்.

இவர்களுக்கு மத்தியில் சதா எந்த நேரமும் குடிகுடியென்றே விழுந்து கிடக்கும் ஒரு லோக்கல் இளைஞராக கலகலப்பூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.

கைதிகளை தூக்கில் போடுபவர்கள் அந்த வேலையை செய்த பிறகு அவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? அவர்களின் சங்கடங்கள் என்னென்ன? என்பதை மிக அழகாக வெளிக்காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதிலும் ஷாம் விஜய் சேதுபதியிடம் நீ இந்த வேலையை செய்தே தான் ஆக வேண்டும் என்று கட்டளையிடும் போது ” ப்ளீஸ் என்னை விட்டுடுங்க சார்.., என்னால கொலை செய்ய முடியாது.” என்று மணற்பரப்பில் அழுது புரளும் காட்சியில் நம்மையும் அறியாமல் இரக்கப்பட வைக்கிறார்.

படத்தில் ஒரே ஒரு பெண் கேரக்டர் கார்த்திகா. எத்தனை நடிகைகள் இப்படி ஒரு போராளி கேரக்டரில் நடிக்க முன் வருவார்கள் என்று தெரியவில்லை. அந்த துணிச்சலுக்காகவே அவரை பாராட்டலாம். ஒருபக்கம் தனது சக தோழர் ஆர்யாவை மீட்கும் போராட்டம், இன்னொரு பக்கம் அவருக்கு விஜய் சேதுபதி ‘ஐ லவ் யூ’ சொல்லும் போது காட்டும் முக பாவங்கள் என ஒரு நிஜ பெண் போராளியின் மறு உருவமாக காட்சி தருகிறார்.

அடடே இப்படத்தின் பின்னணி இசை ஸ்ரீகாந்த் தேவாவாம். படத்தைப் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள். அந்தளவுக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை காட்சிகளுக்கு ஏற்ப பின்னணி இசையமைப்பில் அதிகம் மெனக்கிட்டிருக்கிறார்.

அதேபோல ஆர்ட் டைரக்டர் வி.செல்வகுமார் நிஜ சிறைச்சாலை எப்படி இருக்குமோ அதை அப்படியே பிரம்மாண்டமாகப் போட்டு தன் உழைப்பை கொட்டியிருக்கிறார்.

ஏகாம்பரத்தின் தத்ரூபமான ஒளிப்பதிவில் சிறைச்சாலையை விதவிதமான கோணங்களில் காட்டி காட்சிக்கு காட்சி போரடிக்காமல் பார்த்துக் கொள்கிறார்.

இந்திய மீடியாக்களின் நடுநிலைமை, கைதிகளுக்கு படிக்கக் கொடுக்கும் பேப்பர்களில் சென்ஸார், இந்தியாவை மேலை நாடுகள் பார்க்கும் மனநிலை என பல உண்மையான விஷயங்களை துணிச்சலுடன் (சென்ஸாரிலும் தப்பித்து) இயக்கிய விதத்தில் மக்களின் பக்கமிருந்து பெருமைக்குரிய இயக்குனராக காட்சி தருகிறார் எஸ்.பி.ஜனநாதன்.

மொத்தத்தில் எது ‘மக்களுக்கான சினிமா’ என்று கேட்பவர்கள் எல்லோருமே மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய பெருமை மிகு படம் தான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.