அட, யாருப்பா இது? – அப்படியே அச்சு அசலா புரூஸ்லீ மாதிரி..!

Get real time updates directly on you device, subscribe now.

ஸ்.கே.அமான் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘புதிய புரூஸ்லீ’.

இந்தப் படத்தில் புருஸ் சான் என்பவர் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் ஏ.சோணை.

உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகரான ‘புரூஸ்லீ’ மாதிரியான தோற்றத்தில் நாயகன் புரூஸ் சான் நடித்திருக்கிறார் என்பது இந்தப் படத்தின் தனி சிறப்பம்சமாகும்.

இத்திரைப்படத்தின் டிரெய்யிலர் வெளியிட்டூ விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தைப் பற்றி இயக்குநர் முளையூர் ஏ.சோனை பேசியதாவது,

“உலக சூப்பர் ஸ்டாரான ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகனான எனக்கு அவரைப் போன்ற தோற்றத்தில் நாயகன் ‘புரூஸ் சானை’ பார்த்ததுமே அந்தக் கேரக்டரை மனதில் வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. மேலும் சான், ஏற்கெனவே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் பதக்கங்கள் பெற்றவர் என்று தெரிந்ததும் எனக்கும் இன்னும் அதிகமாக ஆசையும், பலமும் சேர்ந்து கொண்டது. இதன் பின்புதான் இந்தப் படத்தின் கதையையே உருவாக்கினேன்.

கிராமத்தில் இருக்கும் நாயகன் ஒரு பாதிப்பினால் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான தன் மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவரது மாமா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அந்தப் பிரச்சினையை தனது சண்டை திறமையால் தீர்த்து வைத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறான். இதுதான் இந்தப் படத்தின் கதை.

கதையின் நாயகனாக சான் இருந்தாலும், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லீதான். அவர் நடை, உடை, பாவனை.. அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம்.. அனைத்தையும் நான் ரசிக்கும் அளவுக்கு சானிடம் இருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.

குறிப்பாக சண்டை காட்சிகளில் புரூஸ்லீ வெளிப்படுத்திய வீரத்தை இதில் கையாண்டிருக்கிறேன். என் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சண்டை பயிற்சியாளர் ‘த்ரில்’ சேகர் மிகச் சிறப்பாக சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக அவர்களது மனக்கண்ணில் புரூஸ்லீ தோன்றுவார் என்பது மட்டும் உண்மை.

புரூஸ்லீயாக ஒருவரைக் காட்டும்போது அவருடன் சண்டையிடும் வில்லன் மற்றும் சண்டை வீரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை யோசித்து மிகவும் கவனமாக பொறுக்கியெடுத்து தேர்வு செய்துள்ளோம்.

இந்தப் படத்தில் சுரேஷ் நரங் என்பவர் சர்வதேச கிரிமினல் பிஸினஸ்மேனாக வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக ஜிதேந்திர ஹூடாவை மும்பையிலிருந்து வரவழைத்து நடிக்க வைத்திருக்கிறோம். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். மூன்றுமே இசை ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையுமே கவரும் வகையில் அருமையான இசையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தத்தில் இந்த ‘புதிய புரூஸ்லீ’ திரைப்படம் கண்டிப்பாக புரூஸ்லீயின் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான ஆக்‌ஷன் விருந்தாக அமையும்…” என்றார்.