வைக்காத டைட்டிலுக்கு ‘வரிச்சலுகை’ பஞ்சாயத்து?

படத்துக்குப் படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காகவே ஒரு கமர்ஷியல், ஒரு ஃபேமிலி செண்டிமெண்ட், ஒரு காமெடி என விதவிதமான ஜானர்களில் படங்களை தந்து கொண்டிருக்கிறார் தனுஷ். அப்படியிருந்தும் வெற்றி என்று பார்த்தால் மூன்றில் ஒன்றாகத்தான் இருக்கிறது.
இருந்தாலும் மனுஷன் ”வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு சகஜம்” என்கிற மனநிலையோடு தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் அடுத்து கை கோர்த்திருப்பது ‘கயல்’ பட இயக்குநர் பிரபு சாலமனுடன்!
காடும், காடுகள் சார்ந்த இடங்களாக ஸ்டோரி லொக்கேஷன்களை தேர்ந்தெடுக்கும் பிரபு சாலமன் இந்தப்படத்தின் படப்பிடிப்பையும் அந்த மாதிரியான லொக்கேஷன்களில் தான் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இதில் தனுஷ் சென்னையிலிருந்து டெல்லி செல்லும் ரயிலில் டீ விற்கும் பாயாக நடிப்பதால் கதைக்கு பொருத்தமாக இருக்குமே என்று படத்துக்கு ரயில் என்று டைட்டில் வைக்க முடிவு செய்திருந்தாராம் இயக்குநர் பிரபுசாலமன்.
ஆனால் ரயில் என்பது ஆங்கில வார்த்தை, அதை டைட்டிலாக வைத்தால் அரசின் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் டைட்டிலை மாற்றும்படி தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இயக்குநரோ கதைக்கு பொறுத்தமாக இருப்பதால் இதே இருக்கட்டுமே என்பது அவரது பிடிவாதம். இப்படி தயாரிப்பாளரும், இயக்குநரும் தங்கள் பக்கம் பிடிவாதமாக இருப்பதால் பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை.
இதற்கிடையே மிரட்டு என்கிற டைட்டிலை வைக்கவும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறதாம்.