‘மகிழ்ச்சி!’ : இன்னும் இளமையா வரப்போறார் ரஜினி!!
என்ன தான் ‘நெருப்புடா…’ என்று ‘கபாலி’ பாடல்களை ரசிகர்கள் ட்ரெண்ட்டிங்கில் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தாலும் படத்துக்கு இசை விழா என்கிற பிரம்மாண்டம் இல்லாமல் போய் விட்டதே என்கிற வருத்தம் ரசிகர்கள் நெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லை.
படத்தின் டீஸரே மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று விட்ட நிலையில் ஆடியோ ரிலீஸ் பங்ஷனைத்தான் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால் தனது தலைவர் நேரில் தரிசனம் தருவார் என்று காத்திருந்த ரசிகப் பெருமக்களுக்கு ஆடியோ விழா இல்லை என்கிற அதிர்ச்சி தகவல் தான் வந்து சேர்ந்தது.
அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்ற ரஜினிக்கு திடீர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்தி பரவ பதறிப்போய் விட்டார்கள் ரசிகர்கள்.
ரஜினி இல்லாமல் விழா நடத்துவது சாத்தியமில்லாததால் இயக்குநர் ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ஆகியோர் உட்பட படக்குழுவினரை வைத்து எளிமையாக விழா நடத்தி பாடல்களை வெளியிட்டு விட்டார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.
ரஜினி நடித்த படங்களிலேயே இதுவரை இல்லாத வகையில் புரட்சி பேசும் பாடல் வரிகளை ‘கபாலி’ பாடல்களில் கேட்க முடிகிறது. ‘நெருப்புடா…’ என்கிற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் ஏறி நிற்கிறது. விழா இல்லாத குறையை பாடல்கள் போக்கினாலும் ரஜினிக்கு என்னாச்சு என்கிற கவலை மட்டும் இன்றுவரை ரசிகர்களின் பிஞ்சு மனசை குடைந்து கொண்டே இருக்கிறது.
சரி அமெரிக்காவில் இருக்கும் ரஜினியின் உடல் நிலையின் கண்டிஷன் தான் என்ன?
அந்த சந்தேகத்துக்கு தானே முன்வந்து விளக்கம் கொடுத்திருக்கிறார் மகள் செளந்தர்யா.
ரஜினியுடன் அமெரிக்கா சென்றுள்ள செளந்தர்யா அங்கு அவருடன் வாக்கிங் போவது போன்ற ஒரு படத்தை தனது ட்விட்டரில் வெளியிட்டு அவரது உடல் நலம் குறித்தான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
கபாலி, எந்திரன் 2.0 ஆகிய படங்களில் ஓய்வில்லாமல் நடித்ததால் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட ரஜினி மருத்துவர்களின் அறிவுரைப்படியே தான் அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்றாராம். இந்த ஓய்வுக்குப் பிறகு இன்னும் இளமையான ரஜினியை ரசிகர்கள் நேரில் சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஆனால் யாரோ சில புண்ணியவான்கள் ரஜினி உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிக்சை எடுக்கச் சென்றிருக்கிறார் என்று ‘கிளப்பி’ விட்டு விட்டார்கள்.
ஒருவேளை அமெரிக்கவில் இருக்கும் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனாலும், இதற்கு முன்பு அவர் சிகிச்சை எடுத்த சிங்கப்பூர் மருத்துவமனையில் தான் மீண்டும் சிகிச்சையை தொடர வேண்டும் அதுதான் சரியானதும் ஆகும் என்பதே நிஜம்.
அந்த நிலை மீண்டும் இல்லாத வரை ‘மகிழ்ச்சி!’