ரஜினி முருகன் – விமர்சனம்
Rating : 3.4/5
”ஜல்லிக்கட்டு காளையை புல்லுக்கட்டு சுமக்க விட்ட கதையாக எதற்காக இப்படி ஒரு பக்கா எண்டர்டெயினர் படத்தை ரிலீஸ் சிக்கலில் சிக்க விட்டார்கள்” என்கிற கேள்வி? படம் பார்த்து விட்டு வெளியே வருகிற அத்தனை ரசிகர்களின் மனதிலும் எழும்பி விட்டிருக்கும்.
தாத்தா – பேரன் பாசப்பிணைப்போடு காதல், ஃபேமிலி, செண்டிமெண்ட், காமெடி என அத்தனை ரசனைகளையும் ஒன்றாக்கி நிஜமான பொங்கல் விருந்து படைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
நான்கைந்து கேரக்டர்களை வைத்துக் கொண்டே கதையை நகர்த்த அல்லல்படும் இயக்குநர்களுக்கு மத்தியில் எக்கச்சக்க நட்சத்திரங்களை படம் முழுக்க உலவ விட்டு அதகளம் பண்ணியிருக்கிறார்கள். ரெண்டரை மணி நேரம் போவதே தெரியாமல் ரசிகர்களை கட்டிப்போடுகிறார்கள்.
அத்தனை பேரப்புள்ளைகள் இருந்தும் எல்லோரும் வெளிநாடுகளுக்கு சென்று குடும்பத்தோடு செட்டிலாகி விட, கூடவே இருந்து பாசம் காட்டுகிற ஒரே பேரன் தான் சிவகார்த்திகேயன்.
அவருக்காக தனது சொத்து பத்துகளை விற்று பங்கு பிரித்து கொடுக்க ஆசைப்படும் ராஜ்கிரண் அதற்கான வேலையில் இறங்குகிறார். இதற்கிடையில் சின்ன வயசிலிருந்தே இவள் தான் உனக்கு என்று அப்பாவால் கை காட்டி விடப்படுகிற கீர்த்தி சுரேஷை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.
இன்னொரு பக்கம் அதே ஊரில் அடுத்தவனை மிரட்டியே காசு பார்க்கும் ரெளடியான சமுத்திரகனி நானும் ராஜ்கிரணின் பேரன்களில் ஒருவன் தான் அதனால் எனக்கும் சொத்தில் பங்கு வேண்டுமென்று மல்லுக்கு நிற்கிறார்,
அவரிடமிருந்து பூர்வீக சொத்துக்களை மீட்டு கீர்த்தி சுரேஷை சிவகார்த்திகேயன் கை பிடித்தாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரிக்க சிரிக்க மதுரை பின்னணியில் காமெடிப்படம். வழக்கமான சிவகார்த்திகேயனின் மேனரிசங்கள், டயலாக் டெலிவரி என ரஜினிமுருகன் கேரக்டரில் கலகலப்பூட்டுகிறார் சிவகார்த்திகேயன். போதாக்குறைக்கு சூரியும் சேர்ந்து செய்யும் அளப்பறையில் தியேட்டரே சிரிப்பு சத்தங்களில் குலுங்குகிறது. சத்யராஜ் – கவுண்டமணி காம்பினேஷன் போல சிவகார்த்திகேயன் – சூரி காமெடி காம்போ சூப்பராக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.
வில்லனாக வரும் சமுத்திரக்கனியை இப்படி ஒரு கேரக்டரில் எந்தப்படத்திலும் பார்த்திருக்கவில்லை தமிழ்சினிமா ரசிகர்கள். ஊருக்கு ஒருவனாக இப்படிப்பட்ட கெட்ட மனுஷன் இருப்பான் என்கிற கேரக்டர் தான் அவருடையது.
அறிமுகக் காட்சியில் பயங்கர வில்லத்தனத்தோடு அறிமுகமாகிறவர் கிளைமாக்ஸில் பார்த்தியா கொடுத்த 1 லட்சத்தை வாங்கிட்டம்லே… என்று கெத்தாக திரும்பிப் போகும் போது விசில் சத்தம் காதை பிளக்கிறது.
தாத்தாவாக வரும் ராஜ்கிரண் அற்புதமான தேர்வு.
”உங்களுக்கெல்லாம் உங்க பசங்களை பார்க்காம இருக்க முடியாது, அதேமாதிரி தான் என்னாலேயும் உங்களை பார்க்க இருக்க முடியலேப்பா… ஆனால் நீங்க யாருமே எந்த காரணத்தை சொல்லிக் கூப்பிட்டாலும் என்னை பார்க்க வர மாட்டேங்கிறீங்க, அதனால தான் நான் செத்துப் போற மாதிரி நடிச்சி உங்களை வர வெச்சேன்” என்று உருகி அழுகிற காட்சியில் கூட்டுக் குடும்பத்தின் பெருமையை கண் முன் கொண்டு வருகிறார் ராஜ்கிரண்.
சின்னச் சின்ன காமெடி டைமிங் வசனங்கள் தான் படத்துக்கு முதுகெலும்பு, படம் முழுக்க அந்த மாதிரியான காட்சிகளை தூவிவிட்டு திரைக்கதை வேகம் எடுக்கிறது.
டி.இமான் இசையில் உம்மேல ஒரு கண்ணு பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கும் மெலோடி என்றால், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. யூத் காமெடி ட்யூன்!
பாலசுப்ரெமணியத்தின் ஒளிப்பதிவில் கீர்த்தி சுரேஷுக்கு சுத்திப் போட வேண்டும், அப்படி ஒரு கிராமத்து அழகியாக வருகிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்கிறார்.
இதுவும் மதுரைப் பின்னணியில் நகரும் படம் தான். ஆனால் ஒரு காட்சியில் கூட துளி ரத்தம் இல்லை. சிரிக்க சிரிக்க ரசித்து விட்டு வரலாம்! நம்பி வாங்க சந்தோஷமாப் போங்க என்று ட்ரெய்லர்களில் ஒரு வாசகம் வரும், அதை படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் உண்மையாக்கி பொங்கலுக்கேத்த உண்மையான ஃபேமிலி எண்டர்டெயினராக கொடுத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம்.
ரஜினி முருகன் – வெற்றித் திருமகன்!