‘2.0’ படம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும்! : ரஜினிகாந்த் பெருமிதம்

Get real time updates directly on you device, subscribe now.

rajini

ஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் ‘டூ பாயிண்ட் ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் அறிமுக விழா நேற்று மாலை மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

எந்திரனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து வர இருக்கும் படமென்பதால் முதல் பாகத்தை விட இந்த இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பும் கூட உருவாகியிருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

6 கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற படத்தின் பர்ஸ்ட் லுக் விழாவில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினருடன் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான்கானும் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் ”ஷங்கருடன் பணியாற்றுவது உண்மையிலேயே கஷ்டமான விஷயம் தான். எந்த செயலையும் கச்சிதமாக முடிக்க கூடியவர். அதனால் தான் அவர் மிகச்சிறந்த இயக்குனராக உள்ளார். படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அக்‌ஷய்குமார் தான் ஹீரோ. எனக்கு அவருடைய கதாபாத்திரத்தை கொடுத்திருந்தால் நான் கண்டிப்பாக நடித்திருப்பேன். அந்தளவுக்கு அவர் படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். படம் ரிலீசான பிறகு அக்‌ஷய்குமாரை இந்த உலகமே வியந்து பாராட்டும். அதோடு இந்தப்படம் கண்டிப்பாக ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் வகையில் இருக்கும். அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்” என்றார் ரஜினி.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசுகையில், ‘ஷங்கரின் ஆற்றல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்கள் எல்லா தரப்பு ரசிகர்களையும் சென்றடையும். எனினும் தற்போது மிகுந்த சவால் நிறைந்த படத்தில் பணியாற்றி வருகிறேன். நான் என்ன செய்தாலும் ஷங்கர் மகிழ்ச்சி அடைய மாட்டார். எனினும் உற்சாகத்துடன் பணியாற்றி வருகிறேன். இந்தியாவிற்கும், உலகிற்கும் ஏதாவது புதுமையாக படைக்க முயற்சி செய்து வருகிறேன்’’ என்றார்.

இதுகுறித்து இயக்குனர் ஷங்கர் கூறும்போது, ‘‘எப்போதும் நான் எனது முந்தைய படைப்பை விட அடுத்து எடுக்கும் படம் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன். 2.0 படத்தை இயக்க எந்திரனை விட 10 மடங்கு அதிக சிரத்தை எடுத்துள்ளேன். இந்த படத்தை இயக்குவது எவரெஸ்ட் சிகரத்தை முதுகில் சுமந்து கொண்டு அதில் ஏறுவதற்கு சமமானது’’ என்றார்.

அக்‌ஷய் குமார் பேசுகையில் ‘‘இந்திய சினிமா வரலாற்றில் இந்த படம் புதிய மாற்றத்தை உருவாக்கும். பொதுவாக நான் என் படங்களில் மேக்–அப் போடுவதில்லை. ஆனால் இந்த படத்திற்கு 3 மணி நேரம் மேக்–அப் போட வேண்டி இருந்தது. போட்ட மேக்கப்பை கலைக்க 1 மணிநேரம் ஆனது. சினிமாவில் நடிக்க தொடங்கியது முதல் போடாத மேக்கப்பை இந்த ஒரே படத்தில் போட்டு விட்டேன். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல. பிரபஞ்சமே அவர் தான்’ என்றார்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யா, 2.0 படத்தின் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா, எழுத்தாளர் ஜெயமோகன், பாடலாசிரியர் மதன்கார்க்கி, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, எடிட்டர் ஆண்டனி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.