‘குற்றப்பரம்பரை’ கதையை படமாக்கக் கூடாது : மீறினால் கேஸ் போடுவாராம் ரத்னகுமார்!

Get real time updates directly on you device, subscribe now.

ratnakumar

‘குற்றப்பரம்பரை’ விவகாரத்தில் பாரதிராஜாவும், பாலாவும் மோதிக்கொண்ட சூழலில் கதையாசிரியர் ரத்னகுமார் இயக்குநர் பாலாவை குமுதம் வார இதழில் கொஞ்சம் கடுமையாகவே தாக்கிப் பேச அன்று மாலையே விளக்கம் கொடுத்து கதையாசிரியர் ரத்னகுமாரை வசை பாடினார் பாலா.

சும்மாவே ரத்னகுமாருக்கு வாய் கொஞ்சம் நீளம் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படிப்பட்டவரை பாலா திட்டினால் சும்மா இருப்பாரா? அவரும் பதிலுக்கு மீடியாக்களை கூப்பிட்டு பாலாவை ஒருமையில் திட்டியதோடு குற்றப்பரம்பரை கதையை படமாக எடுக்க பாலாவுக்கு எந்த உரிமையும் இல்லை. மீறினால் அவன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று ஆவேசமானார்.

இதுகுறித்து அவர் தொடர்ந்து பேசியதாவது :

Related Posts
1 of 14

‘கிழக்கு சீமையிலே’, ‘கருத்தம்மா’, ‘கடல்பூக்கள்’, ‘தமிழ் செல்வன்’, ‘மணிகண்டா’ ஆகிய படங்களுக்கு கதை-வசனம் எழுதி உள்ளேன். எஸ்.ஜே.சூர்யா நடித்த திருமகன் மற்றும் சேனாதிபதி, ‘செங்காத்து பூமியிலே’ படங்களை டைரக்டும் செய்து இருக்கிறேன். 1997-ல் ‘குற்றப்பரம்பரை’ படத்தின் கதையை எழுதி அதனை எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்தேன்.

இந்த கதையை படமாக்கும்படி பாரதிராஜாவிடம் சொன்னேன். அவருக்கு கதை பிடித்ததால் சிவாஜி கணேசனை அப்பா வேடத்திலும் சரத்குமாரை மகன் வேடத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்து படத்தை இயக்க தயாரானார். இளையராஜா இசையில் இந்த படத்துக்காக ஒரு பாடலும் தயாரானது. அப்போது சிவாஜிகணேசனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் பட வேலைகள் நிறுத்தப்பட்டன.

பாரதிராஜா மீண்டும் அந்த படத்தை எடுக்க தயாராகி வந்த நிலையில், ‘குற்றப்பரம்பரை’ படத்தை பாலா இயக்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. அந்த படத்தின் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாலாவை பாரதிராஜா தொடர்பு கொண்டு தடுக்க முயற்சித்தும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. பாரதிராஜாவுக்கு பாலா துரோகம் செய்கிறார்.

‘குற்றப்பரம்பரை’ கதை என்னுடையது. நான் எழுதிய கதையை திருடி உள்ளனர். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. ‘குற்றப்பரம்பரை’ படத்தை பாலா இயக்க கூடாது. மீறி இயக்கினால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்.” என்றார்.