யாரு யாருன்னு கேட்டீங்களே? – இவர் தாங்க அந்த ‘ராட்சசன்’ வில்லன்!
விஷ்ணு, அமலாபால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படம் வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார்.
ஒரு பக்காவான சைக்கோ த்ரில்லராக உருவாகியிருந்த இப்படத்தில் பெண் தோற்றத்தில், அவலட்சணமான பையன் தோற்றத்தில் நடித்த அந்த நபர் யார்? சைக்கோ கொலைகாரனாக நடித்து அனைவரையும் பதற வைத்த அவரைப் பற்றித்தான் ரசிகர்கள் மத்தியில் ஒரே பேச்சாக இருந்து வருகிறது.
அந்தளவுக்கு ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய அந்த வில்லனை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்து வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குனர் ராம்குமார்.
ஆமாம் அவர் பெயர் சரவணன். ‘நான்’ படத்தில் சலீம் என்கிற கேரக்டரில் நடித்தவர் இவர் தானாம். அதன்பின்னர் இவரை ‘நான் சரவணன்’ என்றே பலரும் அழைத்து வருகின்றனர்.
இந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என இயக்குனர் ராம்குமார் கூறியதும், தன்னுடைய முகம் திரையில் தெரியா விட்டாலும், இந்த கேரக்டரால் தான் பேசப்படுவோம் என நம்பிக்கை வைத்து ஒப்புக்கொண்ட சரவணன் உண்மையிலேயே அந்த வெற்றிக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக தினமும் பலமணி நேரம் மேக்கப் போட்டுக் கொண்டு, அதனாலேயே உணவு எதுவும் சாப்பிட முடியாமல் வெறும் ஜூஸ் போன்றவற்றையே குடித்து மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்தப் படத்தில் தனது கேரக்டருக்காக, மேஜிக்கையும் கூட தானாகவே கற்றுக்கொண்டு அசத்தியுள்ளார் இந்த சரவணன். பார்ப்பதற்கு பாலிவுட் நடிகரைப்போல இருக்கும் சரவணனை தேடி இனி நிறைய வாய்ப்புகள் வரலாம்.