RRR- விமர்சனம்

ஒரே நோக்கத்தை கொண்ட இரு ஹீரோக்களும் எதிரும் புதிருமாக நிற்பதும், பின் நட்பாகி எதிரிகளை பந்தாடுவதுமே ஆர்.ஆர்.ஆர் காடுகளில் வாழும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் ஜுனியர் என்.டி.ஆர். காட்டு ஜனங்களின் காவலன் அவர். பிரிட்டிஷார் பழங்குடி மக்களில் இருந்து மல்லி என்ற ஒரு சிறுமியைப் பிரித்தெடுத்துச் சென்று விடுகிறார்கள். அந்த மல்லியை மீட்க பிரிட்டிஷார் மாளிகை இருக்கும் டெல்லிக்குச் செல்கிறார் ஜுனியர் என்.டி.ஆர்.
பிரிட்டிஷ் படையில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் ராம்சரண். அவரது நோக்கம் தன் தந்தையின் முக்கியமான நோக்கம் ஒன்றை நிறைவேற்றுவது. இந்த இருபெரும் ஹீரோக்களின் லட்சியம் எப்படி நிறைவேறியது என்பதே RRR படத்தின் கதை
ஜுனியர் என்.டி.ஆர் சிங்கம் என்றால் ராம்சரண் சிறுத்தை. இருவரின் பாய்ச்சலிலும் அடியிலும் தியேட்டர் அதிர்கிறது. நாம் கொடுக்கும் காசுக்கு இருவரின் என்ட்ரி சீன்களே போதும் என்றளவிற்கு மாஸ் பறக்கிறது இரு காட்சிகளிலும். இருவருமே சண்டைக்காட்சிகளில் சம அளவு ஸ்கோர் செய்கிறார்கள். ஜுனியர் என்.டி.ஆர் மட்டும் எமோஷ்னல் காட்சிகளில் கண்களாலாயே உணர்வுகளை கடத்தி அசரடிக்கிறார். அஜய் தேவ்கன் ப்ளாஸ்பேக் காட்சியில் மிரட்டியிருந்தாலும் படத்தில் பெரிய ஸ்கோப் அவருக்கில்லை. ஆலியாபட், சமுத்திரக்கனி உள்ளிட்ட மற்ற கேரக்டர்கள் எல்லாமே சாம்பாரில் கிடக்கும் கேரட் அளவிற்கு தான் யூஸ் ஆகியிருக்கிறார்கள். சோ சேடு!
படத்தின் மேக்கிங்கில் நிச்சயமாக உலகத்தரம் இருக்கிறது என்றே சொல்லலாம். இண்டெர்வெல் சீக்வென்ஸில் நிச்சயமாக ஒவ்வொரு ரசிகனும் புல்லரித்துப் போவது நிஜம். போலவே க்ளைமாக்ஸ் பைட்டும் ஆக்ஷன் ரசிகர்களுக்கு நல்ல தீனி. படத்தின் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பென்பது அசாத்தியம். ராம்சரண் அறிமுகமாகும் காட்சியை கேமராமேன் எப்படித்தான் அவ்வளவு லைவாக படம் புடித்தாரோ? சிறப்பு. பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே கதைக்கேற்ற நகர்வு. மதன் கார்க்கியின் வசனமும் பாடல் வரிகளும் நல்ல தேர்வு
படத்தின் பெரிய பிரச்சனையே ஆழமில்லாத திரைக்கதை தான். முக்கியமாக எமோஷ்னல் ஏரியாக்கள் முழுமையாக கை கூடவில்லை. அதேபோல் லாஜிக் ஓட்டைகள் படம் காட்டும் மேஜிக்கைத் தாண்டி துருத்தி நிற்கிறது.. ஜுனியர் என்.டி.ஆர் ராம்சரண் இருவரையும் சூப்பர் டூப்பர் ஹீரோக்களாக பில்டப் பண்ணிவிட்டதால் வில்லன் கேரக்டர் அவ்வளவாக எடுபடவில்லை.. சின்ன சின்ன பலவீனங்கள் இருந்தாலும் இந்தப்படத்தின் விஷுவல் அனுபவத்தை தவறவிடவே கூடாது
3/5