சக்தி திருமகன்- விமர்சனம்

விஜய் ஆண்டனி அருண் பிரபு கூட்டணியின் அரசியல் சாட்டை
தலைமைச் செயலகத்தில் தரகு வேலை செய்து கொடுத்து பணம் சம்பாதிக்கிறார் ஹீரோ விஜய் ஆண்டனி. அரசியல் சதுரங்கத்தின் முக்கியமான நபர் கண்ணன் என்பவரின் வீட்டில் வேலை செய்தபடியே தரகுத் தொழிலையும் செய்கிறார். ஒரு சூழலில் கண்ணனுக்கே எதிராக திரும்புகிறார் விஜய் ஆண்டனி. அதற்கான காரணம் என்ன என்பதில் மீதிக்கதை தொடர்கிறது
கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி இயக்குநர் சொன்னதை நல்ல பிள்ளையாக அப்படியே செய்துள்ளார். வாகை சந்திரசேகர் கேரக்டர் நல்ல இன்ட்ரெஸ்டிங்காக எழுதப்பட்டுள்ளது. அவரும் நன்றாக நடித்துள்ளார். காதல் ஓவியம் கண்ணன் தன் கேரக்டரின் ஆழம் உணர்ந்து தரமான நடிப்பைக் கொடுத்துள்ளார்
படத்தில் ஒளிப்பதிவாளர் தனது பணியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இசை அமைப்பாளர் நம்ம விஜய் ஆண்டனியே தான். நடிப்பு தயாரிப்பு என்று பிஸியாக இருந்தாலும் இன்னும் அவர் தனக்குள் இருக்கும் இசைஞனை தொலைத்து விடவில்லை. பாடல்கள் பின்னணி இசை இரண்டுமே துல்லியமாக படத்திற்கு உதவியுள்ளன
முதல் பாதியில் மிகவும் நேர்த்தியாக பயணிக்கும் திரைக்கதை, பின்பாதியில் நிறைய தகவல்களை நமக்குள் திணித்து சற்று அயர்ச்சியூட்டுகிறது. படத்தின் வேகம் தான் மேற்சொன்ன குறையை நிவர்த்திச் செய்கிறது. கிலோ கணக்கில் லாஜிக் கேள்விகள் இருந்தாலும், நச் நச் வசனங்களால் அவற்றை உடைக்கிறார் இயக்குநர் அருண் பிரபு. சின்னச் சின்ன சமரசங்களோடு தியேட்டருக்குள் சென்றால் நிச்சயம் நல்ல அனுபவம் கிட்டும்
3.25/5