சலார்- விமர்சனம்

Get real time updates directly on you device, subscribe now.

கான்சார் ராஜ்ஜியத்தின் அரசியல் ஆக்சன் தான் சலார்

படத்தின் துவக்கத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் ஸ்ருதிஹாசனுக்கு கொலை துரத்தல் நடக்கிறது. அவரைக் காப்பாற்ற வேண்டிய வேண்டுகோள் சாதாரண மெக்கானிக் ஆன பிரபாஸுக்கு வருகிறது. பிரபாஸ் யாரையும் அடிக்கக்கூடாது என்று ஈஸ்வரி ராவ் சத்தியம் வாங்கி வைத்துள்ளதால் ஸ்ருதி ஹாசனுக்காக சண்டைபோட முடியாத சூழல் பிரபாஸுக்கு. ஆனால் நாம் எதிர்பார்த்தபடி அம்மா ஈஸ்வரி ராவ் சத்தியத்தை வாபஸ் வாங்க, பிரபாஸ் சட்டையைக் கழற்றி அடிக்க ஆரம்பிக்கிறார். ஆத்தீ என்னா அடி! அதன் பிறகு பிரபாஸிடம் அம்மா ஏன் அடிதடி கூடாது என்ற சத்தியம் வாங்கினார்? கான்சார் எனும் தனி ராஜ்ஜியத்தில் இருக்கும் பிருத்விராஜுக்கும் பிரபாஸுக்குமான நட்பு என்ன? அந்த நட்பின் எல்லை என்ன? என்பது வரை கதை வளவளவென பயணித்து செகண்ட் பார்ட் லீட்- கொடுக்கப்பட்டு படம் முடிவை எட்டுகிறது

பார்ப்பவர்களை பந்தாடும் கேரக்டர் பிரபாஸுக்கு. நடிப்பதை மறந்து அடிப்பதிலே குறியாக இருக்கிறார். பிருத்விராஜ் கேரக்டருக்கு பெரிய ஸ்கோப் கொடுக்கப்பட்டாலும் அவர் தனித்துவமாக ஜொலிக்கவில்லை. ஆரம்பத்தில் படத்தின் கதையை நகர்த்த மட்டுமே பயன்பட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். பாபிசிம்ஹா, மைம்கோபி, ஜெகபதிபாபு, ஜான் விஜய், ரமணா உள்ளிட்ட ஏராள நடிகர்கள் படத்தில். இவர்களில் பெரும்பாலான ஆட்கள் ஓரளவு ஸ்கோர் செய்தாலும் அனைவரும் ஒரே டோனில் பேசி நடித்துள்ளார்கள். அது செம்ம அலுப்பு

ரவி பஸ்ரூர் பின்னணி இசையில் விறுவிறுப்பை ஏற்றுகிறார். பாடல்கள் பெரிதாக வொர்க் ஆகவில்லை. சில இடங்களில் கூடுதலான இரைச்சலும் இரிடேட் செய்கிறது. எடிட்டர் உச்வால் குல்கர்னி படத்தின் நீளத்தை ஏகத்துக்கும் நீட்டி விட்டுட்டார். ஸ்லோமோஷன் ஷாட்களை குறைத்தால் கூட கொஞ்சம் புட்டேஜ் மிச்சம் வந்திருக்கும். கேமராமேன் புவன் கெளடா விஷுவலில் அப்படியே கே.ஜி.எப் எபெக்ட். வரைகலை நன்றாக இருக்கிறது. ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் வொர்க்கும் ஓகே

படத்தில் விளக்கப்படும் கதைகளை நாம் விளங்கிக்கொள்ளவே நமக்கு ஒருவாரம் தேவைப்படும்..படத்திற்குள் அவ்வளவு கதைகள். இவற்றை இயக்குநர் பிரசாந்த் நீல் திரைக்கதை வழியாக நமக்கு கடத்துவதற்குள் பாதிபடம் முடிந்துவிடுகிறது. மீதி பாதியில் கால்வாசி பிரபாஸின் பில்டப்புகளுக்குப் போக எஞ்சியிருக்கும் கால்பாதியே படமாக மிஞ்சிருக்கிறது. கடலில் குளிக்கச் சென்றுவிட்டு கால் நனைத்துவிட்டு வந்தது போல் ஆகிவிட்டது படம்.
2/5