கடுமையான மன உளைச்சலில் வடிவேலு – ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் வெளிவருமா?
சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ என்ற வரலாற்று பின்னணியைக் கொண்ட காமெடிப் படம் சூப்பர் ஹிட்டானது. அதைத் தொடர்ந்து ‘இந்திரலோகத்தில் நா. அழகப்பன்’ உட்பட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்தப் படங்கள் எல்லாமே தோல்வியைத் தழுவின.
இதனால் பட வாய்ப்புகளே இல்லாமல் மார்க்கெட் குறைந்து வீட்டில் உட்கார்ந்திருந்தவரை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகமாக ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் புதுப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார் இயக்குனர் சிம்பு தேவன்.
முதல் பாகத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கரே தனது எஸ்.பிலிம்ஸ் சார்பில் தயாரித்த இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே நின்று போனது. படப்பிடிப்பில் சிம்பு தேவனுக்கு ஓவர் டார்ச்சர் கொடுத்தார் வடிவேலு. இதனால் ஏற்பட்ட மோதலின் காரணமாக படப்பிடிப்புக்கு வருவதையே தவிர்த்தார் வடிவேலு.
இதையடுத்து இயக்குனர் ஷங்கர் வடிவேலுவைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இந்த பிரச்சனை பற்றி பதில் அளிக்கும்படி சங்க வடிவேலுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் நடிகர் சங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டது. அதன்பிறகு படப்பிடிப்புக்கு வராததால் ஏற்பட்ட நஷ்டத்தையும், முன்னதாக வாங்கிய சம்பள பணம் முழுவதையும் ஷங்கருக்கு திருப்பி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் முழுப்படத்தையும் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் வடிவேலுவை எச்சரித்தது.
இதனால் மிரண்டு போன வடிவேலு தான் படத்தை முடித்துக் கொடுப்பதாக அறிவித்தார். இதனால் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்து விட்டது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கையில் இனி புலிகேசி படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் வடிவேலு.
“இம்சை அரசன் 24-ம் புலிகேசியில் நடிக்க 1-6-2016 – ல் ஒப்புக் கொண்டேன். 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்து விடுவதாகவும், அதுவரை வேறெந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ள வேண்டாம் என்றும் என்னிடம் உறுதி அளித்ததால், வேறு படங்களில் நடிப்பதை நான் தவிர்த்தேன்.”
“நான் நடித்துத் தர மறுத்திருந்தால், பட நிறுவனம் டிசம்பர் 2016-க்குள் ஏன் புகார் தரவில்லை? ஒப்பந்த காலம் முடிந்து ஒரு வருடத்திற்குப் பிறகு கெட்ட நோக்கோடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு, 2016 – 2017 ஆண்டு காலங்களில் பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தேன். இதனால் எனக்கு பொருளாதார இழப்பும், மன உளைச்சலும் ஏற்பட்டது.”
“இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று நடிகர் சங்கம் என்னை வற்புறுத்துவதற்கு முன்பு, என்னை அழைத்து கருத்து கேட்காதது விதிகளுக்கு முரணானது. இந்தப் படத்தில் நாசர் நடிப்பதால், நடிகர் சங்க நலனுக்காக அவரால் செயல்பட முடியாத நிலைமை உள்ளது. இதில் தொடர்ந்து நடித்தால், நான் ஒப்பந்தமாகி உள்ள வேறு படங்கள் பாதிக்கப்படும். “
அது மட்டுமில்லாமல் என்னுடைய பொருளாதார, குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணங்களால், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் மேற்கொண்டு நடிக்க நாட்கள் ஒதுக்க இயலாத நிலையில் உள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.
வடிவேலுவின் இந்த முடிவால் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படம் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.