செயல் – விமர்சனம்
RATING – 2.5/5
நடித்தவர்கள் – ராஜன் தேஜேஸ்வர், தருஷி, ரேணுகா, சமக் சந்திரா, வினோதினி, முனீஸ்காந்த் மற்றும் பலர்
ஒளிப்பதிவு – வி.இளையராஜா
இசை – சித்தார்த் விபின்
இயக்கம் – ரவி அப்புலு
வகை – நாடகம், ரொமான்ஸ்
சென்சார் பரிந்துரை – ‘U’
கால அளவு – 2 மணி நேரம் 10 நிமிடங்கள்
எதிர்ப்பார்ப்போடு போகும் சில படங்கள் ரசிகர்களை ஏமாற்றி விடும்.
”இதுவும் உப்புமா படங்களில் இன்னொரு எண்ணிக்கை தான்” என்று நம்பிக்கையில்லாமல் போகும் சில படங்கள் நம்மை ”அடடே…” சொல்ல வைத்து விடும். அப்படி ஒரு ஆச்சரியம் தான் இந்த ‘செயல்’.
வட சென்னை தான் படத்தின் கதைக்களம்.
கதைப்படி வட சென்னையில் இருக்கும் மார்க்கெட் ஒன்றை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மாமூல் வசூலித்து வருகிறார் வில்லன் சமக் சந்திரா.
அப்படிப்பட்டவரை அவரை விடச் சிறியவரான ஹீரோ ராஜன் தேஜேஸ்வர் எல்லோர் முன்னிலையிலும் அடித்து துவைத்து விடுகிறார்.
அடுத்த நாள் முதல் சமக் சந்திராவுக்கு மார்க்கெட்டில் மாமூல் வரமால் போக, அந்த மார்க்கெட்டே அவரது கையை விட்டுப் போய் விடுகிற சூழல் வருகிறது.
இதனால் ஆவேசப்படும் சமக் சந்திரா அதே மார்க்கெட்டில் எல்லோர் முன்னிலையிலும் ஹீரோ ராஜன் தேஜேஸ்வரை அடித்து துவம்சம் செய்து மீண்டும் மார்க்கெட்டை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சிக்கிறார்.
அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? வில்லனிடம் அடி வாங்குவதிலிருந்து ஹீரோ தப்பித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
அறிமுக நாயகனான வருகிறார் ஹீரோ ராஜன் தேஜேஸ்வர். கொஞ்சம் தெலுங்கு கலந்த தமிழில் அவர் பேசும் வசனங்களைக் கேட்கிற போது நமக்கு சிரிப்பு வந்தாலும், நடிப்பு என்று வரும் போது புதுமுகம் என்றே தெரியாத வண்ணம் அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக டான்ஸ், ஸ்டண்ட் இரண்டிலும் வெளுத்து வாங்குகிறார். தன்னை அடிப்பதற்காக ஒரு பக்கம் வில்லன் துரத்திக் கொண்டிருந்தாலும் அவனை அடித்ததால் வீட்டில் வருமானம் இல்லாமல் அவனது மகன் படிப்பு பாதிக்கப்படும் போது அதை தானே பார்
நாயகி தருஷி தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் ஹீரோவை முதலில் முறைப்பதும், பின்னர் அவனது நல்ல மனசு கண்டு காதலிப்பதும் என பல படங்களில் வருகிற ரெகுலர் ஹீரோயின் தான். பார்க்க செக்கச் செவேல் என்றிருக்கிறார். சில காட்சிகளில் வசனங்களை உச்சரிப்பதில் தடுமாற்றம் தெரிகிறது.
ஒரு பயங்கரமான வில்லனாக அறிமுகமாகும் சமக் சந்திரா ஹீரோவிடம் அடி வாங்கிய பிறகு நகரும் காட்சிகள் எல்லாமே வயிறு வலிக்க சிரிப்புக்கு உத்தரவாதம். அவ்வளவு பெரிய ரவுடியைப் பார்த்து பயப்படும் அத்தனை பேரும், ஹீரோவிடம் அடி வாங்கிய பிறகு கேலி, கிண்டல் செய்வது, மரியாதை இல்லாமல் நடத்துவது, அதனால் அவர்படும் அவமானங்களை நகைச்சுவைக் காட்சிகளாக மாற்றியிருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனமான திரைக்கதை.
அவரது அடியாட்களாக வருகிற முனீஸ் காந்த், சுப்பர் குட் சுப்பிரமணியன் ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள். ஹீரோவின் அம்மாவாக வரும் ரேணுகா, வில்லனின் மனைவியாக வரும் வினோதினி என படத்தில் வருகிற மற்ற நடிகர், நடிகைகளும் தங்கள் பங்களிப்பை மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
சித்தார்த் விபினின் பின்னணி இசையும், வி.இளையராஜாவின் ஒளிப்பதிவும் படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் ரவி அப்புலு.விஜய்யை வைத்து ‘ஷாஜகான்’ என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த கே.எஸ்.ரவி தான் தன்னுடைய பெயரை ரவி அப்புலு என்று மாற்றி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
அந்த வகையில் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அவரது அனுபவம் தெரிகிறது. காதல், காமெடி, செண்டிமெண்ட்டோடு ஒரு சமூகப் பிரச்சனையையும் சொல்லி தொய்வில்லாத படத்தைக் கொடுத்திருக்கிறார்.
எதிர்ப்பார்ப்பு இல்லாமல் போனால், மனசு விட்டு சிரித்து, முழுமையாக ரசிக்க வைக்கும் படம் தான் இந்த ‘செயல்’!