அப்பா வழியில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் சண்முக பாண்டியன்!
‘மதுரை வீரன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் புதுப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கிறார் விஜயகாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன்.
ஜி எண்டர்டெயினர்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம், இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக வீரம், வேதாளம், மற்றும் விவேகம் படங்களில் பணிபுரிந்த ஜி.பூபாலன் இயக்குனராக அறிமுகமாகிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பூபாலனிடம் கேட்டபோது, “போலீஸ் திரைப்படங்கள் என்றாலே பெரும்பாலும் துரத்தல், பிடித்தல் என்ற வகையிலேயே இருக்கும், ஆனால் நாங்கள் மிகவும் யதார்த்தமான விதத்தில் சித்தரித்திக்கிறோம்.
இது ஆக்ஷன் மற்றும் எமோஷன் கொண்ட வண்ணமயமான பொழுதுபோக்கு படம். கல்லூரி படிப்பை முடித்து, காவல் துறையில் பயிற்சி பெற்று, மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து சேவை செய்யும் ஒரு இளைஞனின் கதை” என்றார்.
படத்தில் சண்முக பாண்டியன் ஜோடியாக ரோனிகா நடிக்கிறார். வம்சி கிருஷ்ணா, பவன், சாய் தீனா, அழகம் பெருமாள் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள்.
தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா, நாயகனின் தாயாக நடிக்கிறார். இந்த அம்மா, மகன் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பு இந்த படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. தமிழ் சினிமாவின் மிக முக்கிய பிரபலம் இந்த படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை மிக விரைவில் வெளியிடுவார்.