கைதி கன்பார்ம் ஹிட்டு! கார்த்தி நம்பிக்கை
மாநகரம் புகழோடு விஜய்யின் 64-வது பட இயக்குநர் என்ற புகழும் சேர்ந்துள்ளது இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு. அவரின் இரண்டாம் படமான கைதி இதோ தீபாவளி ரேஸில் திரைக்கு வர இருக்கிறது. எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ள இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு பேசிய ஹீரோ கார்த்தியின் வார்த்தைகளில் படம் மீதான நம்பிக்கை தெறித்தது.
அவர் பேசியதாவது,
“உதவி இயக்குநராக இருக்கும்போது நாம சில படங்கள் செய்யனும்னு தோணும். அப்படி நாம நினைக்கிற மாதிரி படங்கள் நமக்கு எப்போதாவது தான் வந்து சேரும். மெட்ராஸ், தீரன் அந்த வரிசையில் இப்ப கைதியும் வந்திருக்கு. ஒரு களத்தில போய் அந்தக் கேரக்டரைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டு பண்ற படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. அதையெல்லாம் ஆசைப்பட்டு செஞ்சிருக்கேன். லோகேஷ் ஆடியன்ஸுக்கு எப்படி படம் பண்ணணும்னு தெரிஞ்ச டைரக்டர். இதில எந்தளவு புதுசா பண்ண முடியுமோ பண்ணுங்கன்னு சொன்னேன். அதை மொத்த டீமும் பண்ணியிருக்காங்க. முழுக்க முழுக்க நைட்ல ஷீட் பண்ணிருக்கோம். இதில நிறைய ஆக்ஷன் பண்ணிருக்கேன். இந்தப்படத்தில நரேன் கூட நடிச்சது சந்தோஷமான விசயம். எப்போதும் வாழக்கையில எதை வேணாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர். இந்தப்படத்தில எல்லோரும் அவ்வளவு நேர்த்தியா உழைச்சிருக்காங்க. ஒவ்வொரு கேரக்டரும் இந்தப்படத்தில வித்தியாசமா இருக்கும். இந்தப்படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமா இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியா அமைஞ்சிருக்கு. படம் முழுக்க ஆக்ஷன் தான். ஸ்டண்ட் மாஸ்டர். அன்பறிவ் வீட்டுக்கே போகல. எனக்கு லாரி ஓட்டறது ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்தப்படத்தில எனக்கு பழைய லாரிய கொடுத்துட்டாங்க. அதை பிரேக் பிடிக்க பட்டப் பாடு அப்பப்பா.. லாரி ஓட்டறது எவ்வளவு கஷ்டம்னு அப்பத்தான் தெரிஞ்சது. எனக்கு ஆக்ஷன் படம்னாலே ரொம்பவும் பிடிக்கும் இந்தப்படம் முழுக்கவே ஆக்ஷனா அமைஞ்சிருக்கு. இந்தப்படத்தில் நிறைய விசயங்கள் புதுசா கத்துக்க முடிஞ்சது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பேர் வாங்கித் தரும். ரசிகர்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்” என்றார்.